அரிச்சந்திரனும்
சந்திரமதியும் கோட்டைவாயில் தெருக்கள்
முதலியவற்றைக் கடந்து தம் அரண்மனைக்குள்ளே புகுந்தனர் என்பது.
(284)
|
இன்ப
வாழ்க்கை |
389. |
முளைத்த
வெற்பன கோயிலின் முதிர்மலர் அணைமேல்
இளைத்த நுண்ணிடை இரதியும் காமனும் எனத்தாம்
விளைத்தநல் இன்ப வெள்ளத்து வேந்தனும் மயிலும்
திளைத் திளைத்தருள் பொழிந்திடக் கழிந்தன சிலநாள். |
(இ - ள்.)
முளைத்தவெற்பு அனகோயிலின் - தானே தோன்றின
மலைபோன்ற அரண்மனையில், முதிர் மலர் அணைமேல் - மிகுந்த பூக்கள்
பரப்பிய மெத்தைமேலே, இளைத்த நுண்ணிடை இரதியும் காமனும் என -
மெல்லிய நுட்பமான இடையையுடைய இரதியும் மன்மதனும் போல, தாம்
விளைத்த நல் இன்ப வெள்ளத்து - தாங்கள் ஆக்கிக் கொண்ட நல்ல
இன்பவெள்ளத்தில், வேந்தனும் மயிலும் - அரிச்சந்திரவரசனும்
மயில்போன்ற சாயலையுடைய சந்திரமதியும், திளைத்து அருள்
பொழிந்திடச் சிலநாள் கழிந்தன - ஒருவருக்கொருவர் அன்பு ததும்பிட
இவ்வாறு சிலநாட்கள் சென்றன.
அன : தொகுத்தல்; உவம உருவு; மதில் மலர் : வினைத்தொகை;
நுண்ணிடை : பண்புத்தொகை; மயில் : உவமையாகுபெயர். நாள் :
பால்பகா அஃறிணைப்பெயர். அருள் பொழிந்திட - ஒருவர்மேல் ஒருவர்
அன்பு மிகுமாறு. அன்பு ஈன்ற குழவியருளாதலின் அன்பு முதிர்ந்தது எனக்
கொள்க.
(285)
|
சந்திரமதி
கருப்பந் தரித்தல்
கலி
விருத்தம் |
390. |
தருவை
ஒத்த கரத்தரிச் சந்திரன்
அரிவை யைப்பிரி யாமல்அ ணைந்தநாள்
மருவை உற்றதம லர்க்குழல் வல்லிதன்
திருவ யிற்றில்க ருப்பந்தி கழ்ந்ததே. |
(இ
- ள்.) தருவை ஒத்த கரத்து அரிச்சந்திரன் - கற்பகத்தருப்
போன்ற கைவண்மையுடைய அரிச்சந்திரன், அரிவையைப் பிரியாமல்
அணைந்தநாள் - பெண்ணாகிய சந்திரமதியைப் பிரியாது கூடிய நாட்களில்
ஒருநாள், மருவை உற்ற மலர்க் குழல் வல்லி தன் திருவயிற்றில் -
மணம்பொருந்திய பூக்களை அணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற
சந்திரமதியின் மணிவயிற்றில், கருப்பம் திகழ்ந்தது - கருப்பம்
உண்டாயிற்று.
ஏகாரம் :
ஈற்றசை; ஒருநாளும் பிரியாமற் கூடித் கலந்திருந்த
போது வயிற்றில் சூல் விளைந்தது என்க.
(286)
|