பக்கம் எண் :


204

    பெண்கள் நீராடப் புறப்படல்
398. இளகி லாதிடைச் சேலைஇ றுக்கிமென்
புளகக் கொங்கையில் கச்சுறப் பூட்டியே
அளகம் பின்னி அணிகள் அணிந்துமாப்
பிளவு தோன்றுகட் பேதையர் தோன்றினார்.

     (இ - ள்.) இளகிலாது - நழுவி விடாதபடி; இடைச்சேலை இறுக்கி
- இடுப்புகளில் சேலைகளை இறுகக் கட்டி, மென் புளகக் கொங்கையில்
கச்சு உறப்பூட்டி - மென்மையான புளகம் அரும்பிய தனங்களில்
கச்சாடையை இறுக்கமாக முடிந்துகொண்டு, அளகம் பின்னி - கூந்தலைப்
பின்னிக்கொண்டு, அணிகள் அணிந்து - ஆபரணங்கள் அணிந்துகொண்டு,
மாப் பிளவு தோன்று கண் பேதையர் தோன்றினார் - மாவடுவின்
வகிர்போன்ற கண்களையுடைய பெண்கள் நீராடத் தோன்றினார்கள்.

     நீராடுவோர் உடை நெகிழாமலும், கச்சுக் கழலாமலும், கூந்தல்
குலையாமலும் இறுக்கிக் கட்டிச்செல்லுவது இயல்பு ஆதலின் மாத
ரியற்கையைக் கூறினர் என்க.
                                                   (294)

399. பொன்னின் வட்டிலும் பொன்னின் விசிறியும்
துன்னு தந்தக் குழலும் துருத்தியும்
மின்னு நுண்இடை மெல்லிய லார்கொடு
நின்னி லென்றெதிர் நீர்விளை யாடினார்.

     (இ - ள்.) பொன்னின் வட்டிலும் - தங்கத்தாற் செய்த
வட்டில்களும். பொன்னின் விசிறியும் தங்கத்தாற் செய்த நீர்த்
துருத்திகளும், துன்னும் தந்தக் குழலும் - இறுக்கமான தந்தக் குழாய்களும்,
துருத்தியும் - தோல் துருத்திகளும், மின்னு நுண் இடைமெல்லியலார் -
மின்னல் போன்ற நுண்ணிய இடுப்பினையுடைய மென்மைப்
பண்பினையுடைய பெண்கள், கொடு - கொண்டுவந்து, நில் நில் என்று
எதிர் நீர் விளையாடினார் - நில் நில் என்று சொல்லி ஒருவருக்கொருவர்
எதிர் நின்று நீரைத் தெளித்து விளையாடினார்கள்.
     தங்க வட்டில் : நீர் முகந்து வைத்துக்கொள்வதற்கும், ஏனைய நீர்
தெளிப்பதற்குமாம். நுண்ணிடை : பண்புத்தொகை. கொடு : தொகுத்தல்;
நில் + நில் நின்னில். ''லள மெலி மேவின் னணவும்'', ''னலமுன் றனவும்
ஆகுந் தநக்கள்'' விசிறி - நீரைச் சொரியும் கருவி. தந்தக்குழல் -
யானைத்தந்தத்தாற் செய்யப்பட்ட நீர் செலுத்துங் குழல். துருத்தி -
தோலாற் செய்யப்பட்ட நீர் செலுத்துங் கருவி. இவை நீர் விளையாடற்
குரியன நீரை இடைவிடாது ஒருவர்மே லொருவர் பாய்ச்சும்போது
பொறுக்க முடியாமல் ஓடுவாரை நோக்கி நில் நில், என்று கூறினர் எனக்
கொள்க.
                                                   (295)

 
    நீர் விளையாடற் சிறப்பு
400. ஆழி சோர அணிவடம் சோர்ந்திடத்
தாழி நீர்மொண்டு தாம்எறிந் தாடினார்
ஏழு மேகமும் ஒத்திடத் துப்பொழி
ஊழி காலத்து மாரியை ஒக்கவே.