பக்கம் எண் :


205

     (இ - ள்.) ஆழி சோர - மோதிரங்கள் கழன்றிடவும், அணி வடம்
சோர்ந்திட - அழகிய முத்துமாலைகள் சோர்ந்திடவும், தாழி நீர் மொண்டு
- பெரிய பானையிலுள்ள நீரை முகந்து, ஏழு மேகமும் ஒத்து இடத்துப்
பொழி ஊழி காலத்து மாரியை ஒக்க - ஏழு மேகங்களும் ஒன்றுகூடி ஒரே
இடத்தில் பொழிகின்ற ஊழிக்காலத்து மழையைப் போன்று, தாம் எறிந்து -
தாங்களே ஒருவர்மேல் ஒருவர் எறிந்து, ஆடினார் - விளையாடினார்கள்.

     ஏகாரம் : ஈற்றசை.

     யுகமுடிவு காலத்து மழை இடைவிடாது பொழியும் என்பதும்
பெருமழையாகப் பொழியும் என்பதும் குறிப்பாற் றோன்றியது. நீராடிய
சிறப்பு ஊழிக்கால மழைபோல இருந்தது என்பது.
                                                   (296)

401. துடிஇ டக்கை வளைபணை துந்துபி
திடிமென் பேரிகை சின்னநற் காகளம்
இடிஎனக் கிளர்ந் தார்த்திட ஏழையர்
படியின் மின்பரந் தென்னப் பரவினார்.

     (இ - ள்.) துடி, இடக்கை, வளை, பணை, துந்துபி - உடுக்கை
இடக்கை, சங்கு, நகரா, துந்துபி முதலிய வாத்தியங்கள், திடிமென் பேரிகை
- திடிம் என்று ஓசை முழக்குகிற மென்மையான பேரிகை, சின்னம் -
சின்னம், நல் காகளம் - நல்ல எக்காளம், (முதலிய வாத்தியங்கள்) இடி
எனக் கிளர்ந்து ஆர்த்திட - இடிபோல் எழுந்து ஆரவாரஞ்செய்ய,
படியில் - பூமியில், மின் பரந் தென்ன ஏழையர் பரவினார் - மின்னல்
பரவியதுபோலப் பெண்கள் எங்கும் பரவியிருந்தார்கள்.

     திடிம் : ஒலிக்குறிப்புச்சொல். என்ன : உவம உருபு. உடுக்கை
முதலிய பறைகளும் சின்ன முதலிய ஊது கொம்புகளும் முழங்க மங்கையர்
எங்கும் பரவி நீராடினர் என்க.
                                                   (297)

 
402. முருக்கின் வாய்ச்சி ஒருத்தி முகத்தில்ஓர்
திருக்கு ழல்பெய் செழும்புனல் சிந்துதல்
அருக்கற் கென்றும் அளித்திடும் அர்க்கியம்
சரற்ச சிக்கும் தருசெயல் போன்றதே.

     (இ - ள்.) முருக்கின் வாய்ச்சி ஒருத்தி முகத்தில் - முருக்கம்பூ
விதழ்போன்ற சிவந்த வாயையுடைய ஒரு பெண்ணின் முகத்தில், ஓர்
திருக்குழல் பெய் செழும் புனல் சிந்துதல் - மற்றொரு பெண் அழகிய நீர்
செலுத்துங் குழலில் வைத்து ஊற்றுகின்ற செழுமையான தண்ணீர்
சிந்துதலானது, அருக்கற்கு என்றும் அளித்திடும் அர்க்கியம் - சூரியனுக்கு
எந்நாளும் கொடுக்கிற அர்க்கிய நீர், சரல் சசிக்கும் தரு செயல் போன்றது
- மழைக்காலத்திற் சந்திரனுக்கும் கொடுக்கிற செய்கையைப் போன்றது.