பக்கம் எண் :


207

405. காரு ருக்கொள் கருங்குழல் கைக்குழல்
நீரொ ருத்தி நிதம்பத்திற் றாக்கலாற்
போருக் கென்று புறப்படும் புட்பகத்
தேருக் கிட்ட திரள்வடம் ஒத்ததே.

     (இ - ள்.) கார் உருக்கொள் கருங்குழல் - மேகத்தின் நிறங்
கொண்ட கருமையான கூந்தலையுடைய ஒரு பெண்ணின், கைக் குழல் நீர்
- கையிலுள்ள நீர் தூற்றுங் குழலின் நீரை, ஒருத்தி நிதம்பத்தில்
தாக்கலால் - மற்றொருத்தியின் அல்குலில் பாய விடுதலால், போருக்கு
என்று புறப்படும் புட்பகத்தேருக்கு இட்ட திரள் வடம் ஒத்தது -
சண்டைக்கென்று வெளிப்படும் புட்பகத் தேருக்கு இடப்பட்ட திரண்ட
முத்துமாலையைப் போன்றிருந்தது.
     நீர் ஒழுங்காகத் தெறிக்கப்பட்டது முத்துமாலை போன்றிருந்தது.
அல்குல் ஒரு தேர் போலத் தோன்றிற்று. அதன்மேல் விழும் நீர் வீழ்ச்சி
முத்துமாலைபோல இருந்தது என்றுகொள்க.
                                                   (301)

406. புழுகு சந்தனம் பொன்னிறக் குங்குமம்
ஒழுகு செச்சை உதகம் இமசலம்
வழுவில் டொற்சுண்ண நல்லெண்ணெய் மஞ்சணீர்
முழுதும் வல்லியர் மொண்டெறிந் தாடினார்.

     (இ - ள்.) புழுகு சந்தனம் பொன்னிறக் குங்குமம் - புனுகும்
சந்தனமும் பொன்னிறக் குங்குமமும், ஒழுகு செச்சை உதகம் - ஒழுகுகின்ற
செஞ்சாந்துக் குழம்பு நீரும், இமசலம் - குளிர்ந்த பனி நீரும், வழுவில்
பொற்சுண்ணம் - குற்றமற்ற பொன்னிறமான வாசனைப் பொடியும், நல்
எண்ணெய் - நல்லெண்ணெயும், மஞ்சள் நீர் - மஞ்சள் நீரும், முழுதும் -
ஆகிய இவைகள் எல்லாம், வல்லியர் மொண்டு எறிந்து ஆடினார் -
கொடிபோன்ற பெண்கள் முகந்து ஒருவர்மேல் ஒருவர் தெளித்து
விளையானார்கள்.

     புழுகு முதலிய மணப்பொருள்களையும் பனிநீர் முதலிய வாசனை
நீர்களையும், மணப்பொடிகளையும் எண்ணெய் வகைகளையும்
ஒருவர்மேலொருவர் எடுத்தெறிந்து நீர் விளையாடினர் என்க.
                                                   (302)

 
407. வம்பு லாமுலை மாதர்க்கும் மைந்தர்க்கும்
கம்பு மால்களிற் றோனுக்கும் கன்னிக்கும்
அம்பு ராசியில் ஆர்அமு துற்றநாள்
உம்பர் கோன்உற்ற ஓகைவந் துற்றதே.

     (இ - ள்.) வம்பு உலாம் முலை மாதர்க்கும் - வாசனை பரவுகின்ற
தனங்களையுடைய பெண்களுக்கும் மைந்தர்க்கும் - ஆடவர்க்கும், கம்ப
மால் களிற்றோனுக்கும் - அசைந்துகொண்டிருக்கும் தன்மையுடைய பெரிய
பட்டத்து யானையுடைய அரிச்சந்திரனுக்கும், கன்னிக்கும் - சந்திரமதிக்கும்,
அம்பு ராசியில் - தண்ணீர் மிகுந்த கடலில், ஆர் அமுது உற்ற நாள் -
அரிதான அமுதம் வந்து தோன்றிய போது, உம்பர் கோன் உற்ற ஓகை
வந்து உற்றது - தேவர்க்கு அரசன் அடைந்த மகிழ்ச்சி போன்ற மகிழ்ச்சி
வந்து பொருந்தியது.