பக்கம் எண் :


210

     (இ - ள்.) கொற்ற வாசவன் முன் - வெற்றிபொருந்திய
இந்திரனுக்கு முன், வசிட்டன் உரைத்ததற்கு - வசிட்டன் சொல்லியவற்றிற்கு,
எதிர் - எதிராக, கோசிகன் சொற்றவாறும் - கௌசிகமுனி சொல்லிய
விதமும், முடிக்க வன்மை தொடங்கி - தான் சொன்னபடி முடித்துக்
காட்ட வன்மையுடன் தொடங்கி, நாடு - கோசலநாட்டை, விலங்கினால்
செற்ற வாறும் - மிருகங்களினால் அழித்த விதமும், உருத்து -
மிருகங்களின்மேல் கோபங்கொண்டு, வண் திரி சங்கு மைந்தன் -
ஈகைத்தன்மையுடைய திரிசங்கு மைந்தனாகிய அரிச்சந்திரப்பேரரசன்,
எழுந்து கான் உற்ற வாறும் - புறப்பட்டுக் காட்டுக்குப் போன தன்மையும்,
நிகழ்ந்த வாறும் - பின் அங்கே நடந்த நிகழ்ச்சிகளும், உணர்ந்தவாறு
விளம்புவாம் - எமக்குத் தெரிந்தபடி கூறுவாம்.

     இனி, இந்திரன் முன்னிலையில் வசிட்டன் அரிச்சந்திரனை மெய்யன்
என்று கூறியதும், அதற்கெதிராக விசுவாமித்திரன் அவனைப் பொய்யன்
எனக் கூறியதும் அதனைக் காட்டத் தொடங்கி விலங்குகளைப் படைத்து
அவன் நாட்டையழித்தமையும், அதுகுறித்து அரிச்சந்திரன் கானகத்துக்கு
வந்ததும், அதன்பின் நிகழ்ந்தவைகளையும் கூறுவோம் என்று ஆசிரியர்
கூறினர் எனக் கொள்க.
                                                     (2)

 
414. முண்ட கத்தில் உதித்த நாலு
   முகத்த வன்றரு காசிபன்
கொண்ட காதலி பெற்றெ டுத்த
   குலக் குமாரன் வலத்தினால்
பண்ட ழன்று விலங் கலங்கை
   யரிந்த வச்சிர பாணியோன்
அண்டர் கோன் அர சாளு நீடம
   ராவதித் திறம் ஓதுவாம்.

     (இ - ள்.) முண்டகத்தில் உதித்த நாலுமுகத்தவன் தரு காசிபன்
கொண்ட காதலி - திருமாலின் உந்திக்கமலத்துதித்த அயன் பெற்றெடுத்த
காசிபன் வாழ்க்கைத் துணையாகக் கொண்ட மனைவி, பெற்றெடுத்த
குலக்குமாரன் - பெற்றெடுத்த குல மைந்தன், வலத்தினால் பண்டு அழன்று
- தன் பலத்தினால் முன்னாளில் கோபங்கொண்டு, விலங்கல் அங் கை
அரிந்த - மலையின் அழகிய கைகளாகிய சிறகுகளை அறுத்த, வச்சிர
பாணியோன் - வச்சிராயுதத்தைத் கையிலுடைய இந்திரன், அரசாளும் -
அரசாட்சி புரிகின்ற, நீடு அமராவதித் திறம் ஓதுவாம் - பெரிய
அமராவதியின் பெருமையைக் கூறுவோம்.

     தரு காசிபன் : வினைத்தொகை; காசிபன் மனைவி அதிதி. அவள்
பெற்றெடுத்தவன் இந்திரன். வச்சிரத்தால் மலையின் சிறகுகளை
முற்காலத்தில் அரிந்தவன் தேவர்க்கு அரசன். அவன் தலைநகரம்
அமராவதி. அதன் சிறப்பினை ஓதுவாம் என்று ஆசிரியர் கூறினர் எனக் கொள்க.
                                                     (3)