பக்கம் எண் :


214

     (இ - ள்.) உள நாள் எலாம் - உள்ள காலமுழுதும், கோதையர்க்கு
- பெண்களுக்கு, ஆடலும் புனல் ஆடலும் பொழில் ஆடலும் வெறி
ஆடலும் - நடனம் ஆடலும் நீராடலும் சோலைகளில் பூக்கொய்து
விளையாடலும், தேன் அருந்திக் களியாடலும், பாடலும் - பாடுதலும்,
துணர் சூடலும் - பூங்கொத்துக்களைச் சூடுதலும், பல பாவை - பலவிதப்
பொம்மைகள், பைங்கிளி பூவை யாழ் தேடலும் - பச்சைக் கிளிகளையும்
நாகணவாய்ப் புட்களையும் வீணைகளையும் தேடுதலும், பொழில் சேர்தலும்
- சோலைகளில் கூடுதலும், கலை தேர்தலும் - பலவகைக் கலைகளை
ஆராய்தலும், குறை தீர்தலும் - அவற்றிலுள்ள குறைகளை நீக்குவதும்,
தமில் கூடலும் ஊடலும் - தங்களில் இணங்கலும் பிணங்கலும், உள
தொழில் - உள்ள தொழில்களாகும்.

     நாள் எலாம் : ஒருமைப் பன்மை மயக்கம்; உம்மைகள்
எண்ணும்மைகள்; கலை தேர்தல், அவற்றிலுள்ள குறையை யாய்ந்து நிறை
வுறும்படி செய்தலே குறை தீர்தலாம். கூடலும் ஊடலும் : முரண்தொகை.
                                                     (9)

 
        ஊசலாடல்
421. பூசன் மேவிய பாச நீள்விழி
   காதி னோடுறு போர்செயத்
தூசி னோடணி மேகலா பரம்
   வீசுசோ திகள் சூழவே
வாச றோறு மரம்பை மாதர்
   நிவந்த மாமணி வச்சிரத்
தூச லாடுவ தந்த ரத்திலு
   லாவு மின்கோடி ஒக்குமே.

     (இ - ள்.) பூசல் மேவிய பாச நீள் விழி - போர் செய்யும் இயல்பு
வாய்ந்த அன்புற்ற நீண்ட கண்கள், காதின் ஓடு உறு போர் செய -
சாதுகளுடன் பெரும் போர் புரியவும், தூசினோடு அணி மேகலாபரம் -
ஆடைகளுடன் அணிந்திருக்கிற மேகலை முதலிய அணிகள், வீசு
சோதிகள் சூழ - வீசுகின்ற பன்னிற ஒளிகள் சுற்றி விளங்கவும், வாசல்
தோறும் அரம்பை மாதர் - வாயில்களில் எல்லாம் தேவமாதர்கள், நிவந்த
மா மணி வச்சிரத்து ஊசலாடுவது - உயர்ந்த சிறந்த மணிகள் பதித்த வயிர
ஊஞ்சலிலிருந்து ஆடுவது, அந்தரத்தில் உலாவும் மின் கொடி ஒக்கும் -
ஆகாயத்தில் உலவுகின்ற மின்னற்கொடிகள் போன்றிருக்கும்.

     வாயில்களிற் பல மணிகள் பதித்த அணிகள் ஒளிவீச வயிரவூசலீல்
அரம்பையர் அமர்ந்து ஆடுந்தோற்றம் வானத்தில் மின்னற் கொடி
யாடுவதுபோலத் தோன்றும் என்க.
                                                    (10)