பக்கம் எண் :


223

     (இ - ள்.) உம்பர் மன்னன் - தேவர்கட்கு அரசனாகிய இந்திரன்,
வெண் நிழல் திகழ் நீள் முத்தம் வெண் குடை - வெள்ளிய ஒளி வீசும்
நீண்ட முத்துகளாற் புனையப்பட்ட வெள்ளைக்குடையானது, மேல்
நிழற்றுவது - மேல் நின்று நிழலைச்செய்வது, ஆயிரம் கண் நிழல் படவே
- அவனுடைய ஆயிரங்கண்கள் அந்நிழலிற் பட்டவுடனே, இருண்டு
கறுத்து மீள வெளுப்பதாய் - அந்நிழல் இருண்டு கறுப்பாகிப் பின்னும்
வெளுப்பாக மாறவும், இந்திராணி தடம் பெரும் குழல் ஆய கார் தண்
நிழல் செய - இந்திராணியின் நீண்ட பெரிய கூந்தலாகிய மேகம் குளிர்ந்த
நிழலைச் செய்ய, ஒண் நிழல் திருமேனி தாவிட - ஒளிவிளங்கும் சிறந்த
உடம்பின்மீது அந் நிழல் படியவும், இருந்தனன் - அமர்ந்திருந்தான்.

     வெண்கொற்றக் குடையின் நிழல் இந்திரனின் ஆயிரம் கண்களோடு
பொருந்திக் கறுத்தும் வெளுத்தும் தோன்றின. இந்திரன் திருமேனியில்
இந்திராணியின் கூந்தல் நிழல் படப் பொருந்தியிருந்தான். தடம் பெருங்
குழல்: ஒருபொருட்பன்மொழி; வெண்ணிழல்: பண்புத்தொகை; திகழ்
முத்தம்: வினைத்தொகை. தடம் பெருங் குழல்: ஒருபொருட்பன்மொழி.
                                                    (25)

 
          மேற்படி வேறு
437. சுரர்தா னவர்கே சரர்தும்புரு சித்தர் விச்சா
தரர்சா ரணர்பூ தர்பைசாசர்க டந்தி ரக்கின்
னரர்நா ரதனா கரியக்க ரரக்கர் போற்ற
வரரா சன்இருந் தனன்மாமணி ஆத னத்தே.

     (இ - ள்.) சுரர் தானவர் - தேவர் அசுரர்களும், கேசரர் தும்புரு
சித்தர் - கேசரர்களும் தும்புருக்களும் சித்தர்களும், விச்சாதரர் -
வித்தியாதரர்களும், சாரணர் பூதர் பைசாசர்கள் - சாரணர்களும் பூதர்களும்
பைசாசர்களும் தந்திரக் கின்னரர் - யாழ் வாசிக்கின்ற கின்னரர்களும்,
நாரதன் நாகர் இயக்கர் அரக்கர் - நாரதமுனிவரும் நாகருலகத்தவர்களும்
இயக்கர்களும், போற்ற - இவர்கள் யாவரும் துதிக்க, வரராசன் மாமணி
ஆதனத்து இறுந்தனன் - மேன்மைதங்கிய மன்னனாகிய இந்திரன் சிறந்த
மணிகளானாகிய சிம்மாசனத்தில் இருந்தான்.

     ஆதனத்து இருந்தனன் எனக் கூட்டுக. ஆதனத்து + ஏ = அசை.
கேசரர் வானத்தின் வழிச் செல்வார். சுரர் முதலிய பலரும் வந்து
வணங்கித் துதிக்க இந்திரன் அமர்ந்திருந்தான் என்க.
                                                    (26)