பக்கம் எண் :


224

  இந்திரனவைக்கு வந்திருந்த தேவர் முதலியவர்   
438. ஆதித் தனோடம் புலிஆரல் புதன்வி யாழம்
சோதிப் பெருமா மதிச்சுக்கிரன் சௌரி தூம
கேதுப் பவனன் வருணன்சமன் கேடி லாத
நீதிக் குபேரன் முதலோர்கள் நிறைந்து மொய்த்தார்.

     (இ - ள்.) ஆதித்தனோடு அம்புலி - சூரிய சந்திரர்களும், ஆரல்
புதன் வியாழம் - செவ்வாய் புதன் வியாழனாகிய கோள்களும், சோதிப்
பெரு மா மதிச் சுக்கிரன் - பேரொளியையும் பேரறிவையுமுடைய
சுக்கிரனும், சௌரி - சனியும், தூம கேது பவனன் வருணன் சமன் -
அக்கினி வாயு வருணன் யமனும், கேடு இலாத நீதிக் குபேரன் -
அழிதலில்லாத செல்வத்தையுடைய குபேரனும், முதலோர்கள் நிறைந்து
மொய்த்தார் - முதலியவர்கள் கூடித் திரண்டு நெருங்கினார்கள்.

     ஆதித்தன் கோள்களுள் தலைமை நோக்கி ஒடுக்கொடுத்துப் பிரித்து
முதற்கண் வைக்கப்பட்டான். சுக்கிரன் அசுர குருவாதலின் பெரு மா மதிச்
சுக்கிரன் எனப்பட்டான். தேவகுருவாகிய வியாழனை விசேடிக்காது
அசுரகுருவாகிய சுக்கிரனை விசேடித்ததற்குக் காரணம் அசுரர்களுக்குக்
கற்பித்தலும் அவர்களை அதன்வழி நிற்பித்தலும் கடினம் என்பதும்,
தேவர்கள் இயல்பாகவே நல்லறிவு படைத்தவர் நன்னெறி கடைப்பிடிப்பவர்
என்பதும் குறித்தது என்றும் அறிக. மா மதி : ஒருபொருட்பன்மொழி ; நிதி
நீதி என வந்தது நீட்டல் விகாரம். நீதியையுடைய குபேரன் எனவும்
பொருள் கூறலாம்.
                                                    (27)

 
      பல முனிவர் வருகை
439. சனகன் சமதக் கினிமிக்க சனற்கு மாரன்
அனகன் பிருகத் திரிசத்தி அகத்தி யன்சீர்க்
கனகன் சுகன்கா சிபன்கௌதமன் ஆபத் தம்பன்
பனகன் உபமன் னியன்சங்கன் உரோம பாதன்.

     (இ - ள்.) சனகன் சமதக்கினி மிக்க சனற்குமாரன் அனகன் பிருகு
அத்திரி சத்தி அகத்தியன் சிறப்புப்பொருந்திய கனகன் சுகன் காசிபன்
கௌதமன் ஆபத்தம்பன் பனகன் உபமன்னியன் சங்கன் உரோமபாதன்
முதலிய முனிவர்கள்.

     இச்செய்யுள் குளகம் : அணைந்தார் என வரும் பாட்டோடு பொருள்
முடிவு பெறலின், ஞான உபதேசம் பெற்ற முனிவராதலின் மிக்க
சனற்குமாரன் எனப் பட்டார்.
                                                    (28)

 
440. பாரத் துவாசன் குமுதாக்கன் பராச ரன்கர்ப்
பூரத துவாச வடமீனசை பூண்வ சிட்டன்
வீரத் துவாசந் திசைவீசிய கோசி கன்னந்
நேரத் துவாச வினைநண்ணி நிறைந்த ணைந்தார்.

     (இ - ள்.) பாரத்துவாசன் குமுதாக்கன் பராசரன் - பாரத்து வாசன்
குமுதாக்கன் பராசுரன் முதலிய முனிவர்களும், கர்ப்பூரத்து வாச வட மீன்