வெம்
போர்: பண்புத்தொகை; மனு நூல் ஒழுக்கம் வீடு தரும்
என்பதை வீடே மனுநூல் நெறியெனக் காரியத்தைக் காரணமாக
உபசரித்தார். வீடா - கெடாத எனப் பொருள்கொள்ளினும் தகும், பரதார
சகோதரன் - ''தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை. அன்னையிற்
றீரா நன்ன ராண்மை'' என்பதனோடு ஒப்பிடுக. ஆயினும் மிக்கான் என,
இன் வரவேண்டிய இடத்தில் நான்கனுருபு வந்தது : உருபு மயக்கம்.
புகழுக்கும், பொருட்கும், நேருக்கும், நெறிக்கும். பொறைக்கும்
என்பவையும் உருபுமயக்கங்களே புகழாலும் பொருளாலும் என ஆல்
உருபு நிற்கவேண்டிய இடங்கள்.
(33)
445. |
அன்னா
னதுகூ றிடமைந்தரை யட்ட தாலும்
முன்னா ளமர்வென் றொருதண்டின் முடித்த தாலும்
தன்னால் உணரா தசலத்தினன் றான ழன்று
கொன்னார் தவத்தோங் கியகௌசிகன் கூறலுற்றான். |
(இ - ள்.)
அன்னான் அது கூறிட - அத்தகைய வசிட்டன் அது
சொன்னவுடன். மைந்தரை அட்டதாலும் - தன் மக்களை அவன்
கொன்றதாலும், முன்நாள் அமர் வென்று ஒரு தண்டின் முடித்த தாலும் -
முன்னாட் போரை வென்று ஒரு யோக தண்டத்தால் முடிவு செய்ததாலும்,
தன்னால் உணராத சலத்தினன் - தன்னால் அளவிட முடியாத
பெருஞ்சினங் கொண்டவனாய், தான் அழன்று-தான் கொதித்தெழுந்து.
கொள் ஆர் தவத்து ஓங்கிய - பெருமை பொருந்திய தவத்தால் உயர்ந்த.
கௌசிகன் கூறல் உற்றான் - விசுவாமித்திரன் சொல்லத் தொடங்கினான்.
கௌசிகன் அரசு புரியும்போது வேட்டையாடக் காடு
சென்றான்.
அப்போது வசிட்டன் தனது பசுவாகிய காமதேனுவின் உதவியால்
கௌசிகன் உடன்வந்த யாவர்க்கும் சிறந்த விருந்தளித்தான்.
காமதேனுவைத் கவர விரும்பினான் கௌசிகன். காமதேனு கௌசிகனின்
சேனையை அழித்தது. உடனே கௌசிகன் புத்திரர்
கோபங்கொண்டெழுந்தனர். வசிட்டரோடு போர் புரிந்தனர். வசிட்டன்
விழித்துப் பார்த்துத் தன் தவவலிமையால் அவர்களைச் சாம்பலாக்கினான்.
பின் கோசிகன் பெரும்படையோடு போருக்கு வந்தான். வசிட்டன் தன்
யோகதண்டத்தை அப் படை முன் நாட்டினான். யோகதண்டம் படை
முழுவதையும் விழுங்கியது. உடனே கௌசிகன் அரசவலிமையினும்
தவவலிமையே மிக்கது என்பது உணர்ந்து நாட்டை விட்டுக் காடு சென்று
தவஞ்செய்தான் என்பது வரலாறு. இவ் வரலாற்றால் வசிட்டன்மீது
கோசிகனுக்கு முன்னரே பகை இருந்தது என்பது விளங்கும். அதனால்
அவனுக்கு மாறுபாடாகக் கூறத் தொடங்கினான் என்பது குறிப்பு.
(34)
அரிச்சந்திரன்
பொய் முதலிய தீக்குணங்களுடையோன் எனக் கூறல்
446. |
வெய்யன்
பதகன் பரதார விருப்பன் வீணன்
பொய்யன் நிறையும் பொறையும்சிறி தும்மில் புல்லன்
கையன் கபடன் கயவன்றனை நல்ல னென்றிவ்
வையன் திருமுன் னுரைத்தாயிதென் னாகவென்றான். |
|