பக்கம் எண் :


228

     (இ - ள்.) வெய்யன் - கொடியவன், பதகன் - பாதகன், பரதார்
விருப்பன் - பிறர் மனை விரும்புபவன், வீணன் - பயனற்றவன், பொய்யன்
- பொய்யுரை பகர்பவன், நிறையும் பொறையும் சிறிதும் இல் புல்லன் -
சான்றாண்மையும் பொறுமையும் சிறிதும் இல்லாத புல்லறிவாளன், கையன்
- திருடன் கபடன் - வஞ்சகன், கயவன்தனை - ஆகிய அக் கீழ்மகனை,
நல்லன் என்று - நல்லவன் என்று, இ ஐயன் திருமுன் - இந்த அரசன்
திருமுன், உரைத்தாய் - சொன்னாய் இது என் ஆக என்றான் - இது யாது
பயன் கருதி என்றான்.

     வெய்யன் : பண்படியாகப்பிறந்த பெயர். வெய்யனும்
பதகனும் என உம்மை விரித்து ஆகிய கயவன்றனை எனக் கூட்டிக்
கொள்க.
                                                    (35)

 
    வசிட்டன் வருந்திக் கௌசிகனை இழித்துக் கூறல்   
447.

தீவெந் தொழிலின் றிஒப்பற்றமெய்ச் செவ்வி யோனைக்
காய்வெந் திறலா லிவைகூறிய கௌசி காநின்
வாய்வெந் திலைநின் மனம்வெந்திலை வம்பு சொன்ன
நீவெந் திலைதெய் வமும்நின் வயிற் பொய்த்த தென்றான்.

     (இ - ள்.) தீ வெந் தொழில் இன்றி - தீய கொடுமைத்தொழில்கள்
சிறிதும் இல்லாமல், ஒப்பற்ற மெய் செவ்வியோனை நிகரற்ற உண்மையைக்
கைக்கொண்ட செம்மையாளனை, காய் வெந் திறலால் - சுடுகின்ற கொடிய
உன் சொல்வன்மையால், இவை கூறிய கௌசிகா - இக் கடுமொழிகள்
பகர்ந்த விசுவாமித்திரனே!, நின்வாய் வெந்திலை - இக் கொடுமொழி
பகர்ந்த உன்வாய் வேகாதிருக்கின்றனை. நின் மனம் வெந்திலை - இத்
தீயன எண்ணிய உன் மனம் வேகாதிருக்கின்றாய், வம்பு சொன்ன நீ
வெந்திலை - இல்லாத பொய்ம்மொழியை வீணாகப் பகர்ந்த நீயும்
வேகாதிருக்கின்றனை, தெய்வமும் நின் வயின் பொய்த்தது என்றான் -
தெய்வமும் உன்தீமைக்குத் தண்டனை கொடாது உன்னிடத்தில் பொய்த்தது
என்றான்.

     வெந் தொழில்: பண்புத்தொகை; செவ்வியோனை குறிப்பு
வினையாலணையும் பெயர். செவ்வியோன் - ஒழுங்குள்ளவன் வாய்
வெந்திலை எனச் சினைவினை முதலோடு முடிந்தது. மனம் வெந்திலை
என்பதும் அது.
                                                    (36)

 
        கோசிகன் வசிட்டனை இகழ்ந்து கூறல்   
448. தெய்வந் தனைநொந் துவசிட் டனஇச் செய்தி செப்பக்
கைவந் தகொடுந் தொழிற்கௌசிகன் கன்றி நோக்கிப்
பொய்வந் தநின்வாய் புழுவாகுதல் அன்றிப் பொய்யா
மெய்வந் தவென்வாய் மனம்வேவல் வென்று சொன்னான்.

     (இ - ள்.) வசிட்டன் தெய்வம் தனை நொந்து - வசிட்டன்
தெய்வத்தை நொந்து, இச் செய்தி செப்ப - இத்தச் செய்தியைக் கூற,
கொடுந் தொழில் கைவந்த கௌசிகன் - கொடுஞ்செயல்களில் தேர்ந்த
விசுவாமித்திரன், கன்றி நோக்கி - கோபித்துப் பார்த்து, பொய் வந்த நின்
வாய் புழு ஆகுதல்