பக்கம் எண் :


231

     மாறா; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; ஓகாரம்: எதிமறை
தேறா; செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம், நாரதன் கோசிகனை
நோக்கி 'வசிட்டன் இவ்வாறு கூறுவதை ஆய்ந்து நீ வஞ்சினங்கூறு;
உயர்ந்த தவமுனிவன்; அவன் மாறுபாடு இருப்பின் இவ்வாறு
வஞ்சினங்கூறான்' என்று வற்புறுத்திக்கூறினன் எனக் கொள்க.
                                                    (43)

 
     விசுவாமித்திரன் கூறிய வஞ்சினம்   
455.

நன்றா குகவென் றவனாரத னுக்கு ரைத்துப்
பின்றா திவன்போற் பெரும்பாடை பிதற்ற மாட்டேன்
வென்றா னெனின்யான் செய்மெய்த்தவந் தன்னிற் பாதி
குன்றாமல் ஈவேன் எனக்கௌசிகன் கூறி னான்ஆல்.

     (இ - ள்.) நன்று ஆகுக என்று - நல்லது அப்படியே ஆகுக
என்று, அவன் நாரதனுக்கு உரைத்து - அந்த விசுவாமித்திரமுனிவன்
நாரதனுக்குக் கூறி பின்றாது - மேலும் பின் வாங்காமல் இவன்போல்
பெரும் பாடை பிதற்றமாட்டேன் - இந்த வசிட்டமுனிவரைப்போல்
பெருஞ்சபதம் சொல்லமாட்டேன், வென்றான் எனின் - வசிட்டன்
வென்றானாயின், யான் செய் மெய்த்தவம் தன்னிற் பாதி குன்றாமல்
ஈவேன் என - என்னுடைய மெய்த்தவப் பயனிற் பாதியைக் குறையாது
கொடுப்பேன் என்று, கௌசிகன் கூறினான் - விசுவாமித்திரன் சொன்னான்.

     ஆகுக : வியங்கோல் வினைமுற்று; ஆல் : ஈற்றசை, வசிட்டன்
பெரும் பேச்சுப் பேசுவது பிதற்றல் என விசுவாமித்திரன் கூறுகின்றான்.
பாடை - சொல், பிதற்றல் - மாறுபாடாக மயக்கிக் கூறுதல்
வசிட்டனைப்போல நான் பெருவஞ்சினங் கூறமாட்டேன். தோற்றால் என்
தவத்திற் பாதியையே கொடுப்பேன் என்றான் கோசிகன் என்பது.
                                                    (44)

 
            நாரதன் கூற்று
456. அமையும் அமையும் மிஃதேஅரிச் சந்தி ரன்பால்
சமையும் சபையின் திறம்யாவதும் சாற்று றாமல்
எமையும் சுரர்கா வலில்என்றும் இருத்தி நீஇச்
சமையம் துறந்தே கெனப்பின்னரும் சாற்றல் உற்றான்.

     (இ - ள்.) இஃதே அமையும் அமையும் - இதுவே போதும்
போதும், அரிச்சந்திரன்பால் சமையும் சபையின் திறம் யாவதும்
சாற்றுறாமல் - பொருந்திய இச்சபையின் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஒன்றையும்
கூறாமல், எமையும் சுரர் காவலில் என்றும் இருத்தி - என்னையும்
தேவர்கள் காவலில் என்றும் இருக்கச்செய்து, நீ இச்சமையம் துறந்து ஏகு
என நீ இப்பொழுது இவ்விடம் விட்டு நீங்கிப் போக என்று, பின்னரும்
சாற்றலுற்றான் - மேலும் சொல்லத்தொடங்கினான்.

     அடுக்கு: உவகைபற்றி வந்தது யாவதும்: உம்மை இழிவுசிறப்பு:
ஏகென: தொகுத்தல். இஃது நாரதன் கூறியது என்பது அடுத்த பாட்டினால்
விளங்கும். ''எமையும் சுரர் காவலில் என்றும் இருத்தி'' என்று நாரதன்
கூறினன். ஏனெனில் நாரதன் 'எங்கும் செல்பவன்' என்றும் 'கலகத்தை
விளைவிப்பவன்' என்றும் உலகத்தார் தன்னைக் கூறுவதையறிந்தவன்
ஆதலால் என்னைச் சுரர்காவலில்வைத்து நீசெல்க என்றான் பின் தன்மேற்
பிழைகூறாதிருக்கும் பொருட்டு எனக் குறிப்பிற் கொள்க.
                                                    (45)