பக்கம் எண் :


232

457. ஆதித் தன்அருங் குலத்தண்ணலை நண்ணி ஆன்ற
நீதித் தொழிலும் நெறியும்தரு மத்தின் நேரும்
சாதித்த உன்றன் சமைப்பாற்சமர்த் தாற்று மாற்றாற்
சோதித் திடுபோ எனச்சொல்லிஅச் சூழல் உற்றான்.

     (இ - ள்.) ஆதித்தன் அரும் குலத்து அண்ணலை நண்ணி -
அருமையான சூரியகுலத்தில் தோன்றிய பெருமை பொருந்திய
அரிச்சந்திரனை அடைந்து, ஆன்ற நீதித் தொழிலும் நெறியும் தருமத்தின்
நேரும் - நிறைந்த செங்கோன்மையும் நெறியும் அற ஒழுங்கும், சாதித்த
உன்தன் சமைப்பால் நின்று காட்டிய உன்னுடையமுயற்சியாலும், சமர்த்து
ஆற்றும் ஆற்றலால் - திறனுடன் முடிக்கும்வலிமையாலும், சோதித்திடு
போ எனச் சொல்லி - அரிச்சந்திரனைச் சோதித்து அறிந்து கொள் போ
என்று நாரதர் கூறி, சூழல் உற்றான் - தேவர்கள் காவலில் இருந்தான்.

     உம்மை எண்ணும்மை. உற்றான் : உறு பகுதி. ஒற்று இரட்டித்து
இறந்தகாலங்காட்டியது. அரிச்சந்திரன்பாலடைந்து அவன் நீதியும் நெறியும்
அறமும் வாய்மையும் உன் வலிமையாற் சோதித்துக் காட்டுக என்றான்
நாரதன் என்க.
                                                    (46)

 
        இந்திரன் அவை கலைதல்  
458. அக்கா லையில்அந் தஅரும்சபை யும்கு லைந்து
தொக்கார் முனிவோர் பலரும்தம சூழல் சார்ந்தார்
மைக்கார் நிறஅண் ணலைவாழ்த்திஅக் கௌசிகன் போய்ப்
புக்கான் முதல்வை கியபொன்மலைச் சாரற் பொங்கர்

     (இ - ள்.) அக் காலையில் - அப்பொழுது, அந்த அருஞ்சபையும்
குலைந்து - அந்த அருமையான கூட்டமும் கலைந்து, தொக்கார்
முனிவோர் பலரும் தம சூழல் சார்ந்தார் - அங்குக் கூடியவர்கள்
முனிவர் ஆகிய பலரும் தங்கள் தங்கள் இடம் போய்ச் சேர்ந்தார்கள்,
அ கௌசிகன் - அந்த விசுவாமித்திரன், மைக்கார் நிற அண்ணலை
வாழ்த்தி - கருமேகம்போன்ற நிறமுடைய இந்திரனை வாழ்த்தி, முதல்
வைகிய பொன் மலைச் சாரல் பொங்கர் போய்ப் புக்கான் - தான்
முதலிலே வாழ்ந்த மாமேருமலைச் சாரலிலுள்ள சோலையிற் போய்ப்
புகுந்தான்.

     மைக்கார் நிற அண்ணலை வாழ்த்தி, தொக்கார் முனிவோர் பலரும்
தம் சூழல் சார்ந்தார் எனச் கூட்டுவதே சிறந்தது. கௌசிகன் மைக்கார்
நிற அண்ணலை வாழ்த்திப் போய்ப் புக்கான் என்பது சிறப்பன்று. நடுவில்
நிற்பது ஆதலால் இருபாலும் கூட்டிப் பொருள் கொள்ளினும் பொருந்தும்.
                                                    (47)

 
        இந்திர காண்டம் முற்றிற்று.