|
'கோசிகன்
கூறியதை நல்குவதாக வாக்களித்தாற்
கூறுவோம்' என்றல் |
470. |
மன்ன
கேளொரு வாசகம் கௌசிகன்
சொன்ன துண்டது நல்கத் துணிந்திடின்
இன்ன தென்றிங் கியம்புதும் என்றனர்
பின்னர் மன்னவன் பேசத் தொடங்கினான். |
(இ
- ள்.) மன்ன கேள் - அரசனே ! கேட்பாயாக, கௌசிகன்
ஒரு வாசகம் சொன்னது உண்டு - விசுவாமித்திரன் உரையொன்று
உரைத்துள்ளான், அது நல்கத் துணிந்திடின் - அதனைக் கொடுப்பதாக
உறுதி கூறின், இன்னது என்று இங்கு இயம்புதும் என்றனர் - அஃது
இன்னது என்று இவ்விடத்தில் சொல்லுவோம் என்றார்கள், பின்னர்
மன்னவன் பேசத் தொடங்கினான் - பிறகு அரிச்சந்திரன் சொல்லத்
தொடங்கினான்.
இயம்புதும் : உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று.
பின்னர் - அர் : பகுதிப்பொருள் விகுதி. முனிவர்கள் அரசனை நோக்கி,
'அரசே! விசுவாமித்திரர் கூறி விடுத்த சொல் ஒன்றுண்டு, அதன்படி நீ
நல்குவாதாக உறுதி கூறின் அதனைக் கூறுவோம்' என்றனர். பின் மன்னன்
பேசுவான் என்பது.
(12)
|
அரசன்
'தருவோம்' என வாக்களித்தல் |
471. |
இறுதி
எய்தல் எனினும் இனிதுமற்
றறுதி அற்றுள தாயெற் கமைவதேல்
உறுதி நீருரை செய்ததற் கொத்திடப்
பெறுதும் யாமென மாதவர் பேசுவர்.
|
(இ
- ள்.) அறுதியற்று (ஆய்) எற்கு உளதாய் அமைவதேல் -
நீங்குவதில்லாமல் எனக்கு உள்ள பொருளாய் என்பால் அமைந்த
பொருளாக எனக்கு உள்ளதாய் அப்பொருள் பொருந்துமானால், இறுதி
எய்தல் எனினும் - எனக்கு முடிவு நேர்வதாய் இருந்தாலும், நீர் உரை
செய்ததற்கு யாம் ஒத்திடப் பெறுதும் - நீவர் சொல்லியதற்கு நாம்
சம்மதிக்கும் பேறு பெறுவோம், இனிது - அதுவே எமக்கு இனிது, உறுதி
என - இஃது உறுதி என்று அரிச்சந்திரன் கூற, மாதவர் பேசுவர் - சிறந்த
முனிவர்கள் பேசுவார்கள்.
பெறுதும்:
உளப்பாட்டுத்தன்மைப்பன்மை வினைமுற்று. நீங்கள்
என்பாற் கேட்கும் பொருள் என்னைவிட்டு நீங்காத பொருளாகவும்,
எனக்கே யுரிமையுடையதாகவும் இருந்தால் அதனைக் கொடுப்பதற்கு
உடன்படுவேன் என்றான் அரிச்சந்திரன், பிறர் பொருள் தன்பாலிருந்தால்
அது தன்னை விட்டு நீங்கக்கூடிய பொருளாம் என்பது கருதி ''அறுதி
யற்று'' என்றான். அறுதி - நீங்குதல். எற்கு உளதாய் அமைவதேல் என
மாற்றிக்கொள்க.
(13)
|