பக்கம் எண் :


24

  சரயு ஆற்றுநீர் வயல்களிற் பாய்தல்
39. வாலி சேர நிரப்பி மதகினில்
தாவி நீள்கரை சாடி உடைத்தலை
நீவி வண்டல் கொழித்து நெடும்புனல்
பாவி நீள வயலிற் பரந்ததே.

     (இ - ள்.) வாவி சேர நிரப்பி - குளங்களையெல்லாம் ஒருங்கே
நிரப்பி, மதகினில் தாவி - மதகுகளைக் கடந்து சென்று, நீள் கரை சாடி
உடைத்து அலை நீவி - நீண்ட கரைகளை மோதி உடைத்து அலை வீசி,
வண்டல் கொழித்து நெடும் புனல் பாவி நீள வயலில் பரந்தது - வண்டல்
மண்ணை உரமாகத் தெளித்து அச் சரயு நதியின் மிகுந்த நீரானது எங்கும்
பரவி நீளமான வயல்களிலும் பாய்ந்தது.

     ஏ : ஈற்றசை. நெடும் புனல் - பெருகிய நீர். இது சரயு ஆற்றில்
வந்த நீர் என்று கொள்க. நிரப்பி, என்பதை நிரம்பி எனத் தன்வினையாகக்
கொள்க. நிரப்பி, தாவி முதலிய வினையெச்சங்கள் அடுக்கு, பரந்தது என்ற
முற்றைக்கொண்டு முடிந்தது. நெடு புனல் : எழுவாய்.
                                                    (25)

 
40. வரம்பு டைத்துக் கரைத்து மடுக்களின்
குரம்பு டைத்துக் குமுதமும் கஞ்சமும்
கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் கட்டழித்
தரம்பை ஓங்கு படப்பை அழித்ததே.

     (இ - ள்.) வரம்பு உடைத்துக் கரைத்து - வயல்களிலுள்ள
வரப்புகளை உடைத்துக் கரையச்செய்து, மடுக்களின் குரம்பு உடைத்து -
குளக்கரைகளை உடைத்து, குமுதமும் கஞ்சமும் கரும்பும் இஞ்சியும்
மஞ்சளும் கட்டழித்து - குமுத மலர்களையும் தாமரை மலர்களையும்
கரும்பையும் இஞ்சியையும் மஞ்சளையும் கட்டுக்குலையச் செய்து, அரம்பை
ஓங்கு படப்பை அழித்தது - வாழை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள
தோட்டங்களையும் சரயு ஆறு அழித்தது.

     ஏகாரம் : ஈற்றசை. கட்டு அழித்து - உறுதியைக் குலைத்து. குமுதம்
முதலியவை நின்ற நிலையை உலையச்செய்து பல்வேறிடங்களிற் சிதைத்துக்
கொண்டுபோய் எறிந்தது எனவும், வாழைத்தோட்டத்தை அழித்தது எனவும்
கொள்க.
                                                   (26)

 
41. ஏரி சேர உடைத்தழித் தின்கனி
வாரி யோடி வளம்பயின் மள்ளர்தம்
சேரி சேர அழித்துச் செழும்புனல்
பேரி யாறு பரந்து பெருகிற்றே.

     (இ - ள்.) செழும் புனல் பேரி யாறு - வெள்ளம் நிறைந்த அந்தப்
பெரிய சரயு ஆறு, ஏரி சேர உடைத்து அழித்து - எல்லாக் குளங்களையும்
ஒருங்கே உடைத்து நீர் தங்க இடமின்றிக் கெடுத்து, இன் கனி வாரி ஓடி -