பக்கம் எண் :


25

இனிய பழங்களை வாரிக்கொண்டு விரைந்து ஓடி, வளம் பயில் மள்ளர்தம்
சேரிசேர அழித்துப் பரந்து பெருகிற்று - பலவகைச் செல்வங்களும் பழகும்
உழவர் சேரிகள் முழுவதையும் அழித்து எல்லா இடங்களிலும் பரவிப்
பெருகியது.

     செழும்புனல் : பண்புத்தொகை; "ஈறு போதல், இனமிகல்" என்ற
சூத்திர விதியால் ஆயது. பெருமை + யாறு = பேரியாறு. பயிர்த்தொழிலால்
வந்த பலவகை யுணவுப்பொருள்கள் (பதினெண் கூலங்கள்) எல்லாம்
நிறைந்து பழகும் மனைகளையுடையது உழவர் சேரி என்பது தோன்ற
"வளம்பயில் மள்ளர்தம் சேரி" என்றார்.
                                                    (27)

 
     நாட்டில் நல்லோதைகள்
42. நாடு தோறும் மலிந்த நறும்புனல்
ஓடும் ஓதையும் ஓங்கு தடங்கரைஹ
சாடும் ஓதையும் தண்டலை வண்டுகள்
பாடும் ஓதையும் எங்கும் பரந்தவே.

     (இ - ள்.) நாடு தோறும் மலிந்த நறும் புனல் ஓடும் ஓதையும் -
கோசலநாட்டின் பல்வேறிடங்கள் எல்லாம் நிறைந்த நறுநீர் வெள்ளம்
பாய்ந்து ஓடுகின்ற ஒலியும், ஓங்கு தடங்கரை சாடும் ஓதையும் - உயர்ந்த
பெரிய கரைகளிற் மோதுகின்ற ஒலியும், தண்டலை வண்டுகள் பாடும்
ஓதையும் எங்கும் பரந்த - சோலைகளில் வண்டுகள் முரலுகின்ற ஒலியும்
ஆகிய இன்னிசை எவ்விடங்களினும் பரவின.

     நாடு என்பது நாட்டுள்ளடங்கிய இடங்களைக் குறித்தது : ஆகு
பெயர். நீர் ஓடும் ஒலி கரையை நீர் சாடும் ஒலி வண்டுகள் பாடும் ஒலி
இவை நிறைந்திருந்தன அந்நாட்டில் என்பது.
                                                   (28)

 
    மள்ளர் மது உண் மகிழ்ச்சி
43. கள்ள லம்பிய வாயும் களிமகிழ்
உள்ள லம்பிய உள்ளமும் தோன்றவே
புள்ள லம்பிய பொய்கைக் கரையெலா
மள்ளர் வந்து நெருங்கி மலிந்தனர்.

     (இ - ள்.) கள் அலம்பிய வாயும் - மது வழிகின்ற வாயும், களி
மகிழ் உள் அலம்பிய உள்ளமும் - மது அருந்திய மகிழ்ச்சி பொங்கித்
ததும்பி வழிகின்ற மனமும், தோன்ற - வெளியே தோன்றும்படியாக, புள்
அலம்பிய பொய்கைக் கரை எலாம் - பறவைகள் ஒலிக்கின்ற
குளக்கரைகளில் எல்லாம், மள்ளர் வந்து நெருங்கி மலிந்தனர் - உழவர்கள்
வந்து கூடி நிறைந்தனர்.

     கரை எலாம் : ஒருமைப்பன்மை மயக்கம் : எலாம் : தொகுத்தல்;
பொய்கைகளில் உள்ள மீன்களை யுண்டு களித்ததால் பறவைகள்
பாடிக்கொண்டு கரைகளில் இருந்தன என்பது தோன்ற, "புள்ளலம்பிய
பொய்கை" என்றார். மள்ளர் - மருதநிலமாக்கள். அவர்களைப் பள்ளர்