அதிகமாக, தரல் எனக்கு
இயல்பு என்று - கொடுத்தலே எனக்கு
இயற்கையென்று, அரிச்சந்திரன் திரவியங் கொடுவம் எனச் செப்பலும் -
அரிச்சந்திரன் பொருள் கொண்டு வாருங்கள் என்று ஏவலாளரிடம்
கூறவும், பிரமசாரிகள் மீளவும் பேசுவார் - பிரமசரியநிலை மேற்கொண்ட
முனிவர்கள் திரும்பவும் பேசுவார்கள்.
கொடு: கொண்டு என்பதன் தொகுத்தல்; வம்: ஏவற்பன்மை
வினைமுற்று.
'வேள்விக்கு வேண்டும் பொருள் மிகுதியும் தருவது எனக்குத்
தக்கதுதான்' என்றுரைத்துப் பொருளைக் கொண்டு வருக என ஆணை
தந்தனன்; உடனே முனிவர்கள் சொல்லத் தொடங்கினர் என்பது.
(16)
'வேள்வி
புரிநாளிற் பெற்றுக்கொள்வோம்' என்று முனிவர் கூறல்
475. |
இன்று
வேண்டலம் யாகம் இயற்றிடும்
அன்று நல்க அமையும் எமக்கென
நன்று நன்றென மன்னன் நவின்றபின்
நின்று வாழ்த்தி நெடுநகர் நீங்கினார். |
(இ - ள்.)
இன்று வேண்டலம் - இப்பொழுது எங்களுக்கும்
பொருள் வேண்டுவதில்லை, யாகம் இயற்றிடும் அன்று எமக்கு நல்க
அமையும் என - நாங்கள் வேள்வி செய்கின்ற அக்காலத்தில் எங்களுக்குக்
கொடுத்தால் போதும் என்று முனிவர் சொல்ல, மன்னன் நன்று நன்று என
நவின்றபின் - அரசன் நல்லது நல்லது என்று கூறி இசைந்து
சொல்லியபிறகு. நின்று வாழ்த்தி நெடுநகர் நீங்கினார் - எழுந்து நின்று
அரசனை வாழ்த்தி அயோத்திப்பெருநகரை விட்டு அகன்றனர்.
வேண்டலம்: தன்மைப்பன்மை எதிர்மறை வினைமுற்று;
வேண்டு:
பகுதி. அல் : எதிர்மறை இடைநிலை; அம்: தன்மைப்பன்மை வினைமுற்று
விகுதி; அமையும்: செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று; நன்று நன்று:
அடுக்கு உவகைபற்றி வந்தது. நெடுநகர்: பண்புத்தொகை. நவின்ற: நவில்:
பகுதி; ற்: இறந்தகால இடைநிலை; அ; பெயரெச்ச விகுதி. நகர் நீங்கினார்:
ஐந்தாம்வேற்றுமைத்தொகை.
''இன்று நிதி வேண்டாம் வேள்விபுரியும் அன்று
நல்கின் நலம்''
என்று கூறி முனிவர் நீங்கினார் என்க.
(17)
|
முனிவர்கள்
கோசிகனிடம் வருதல் |
476. |
செந்நெல்
வெண்ணெல் விளையும் செறுக்களும்
கன்னன் மன்னும் கழனியும் சோலையும்
அன்னம் ஆடுந் தடமும் அகன்றுபோய்ப்
பன்ன சாலைப் பழுவத்துள் எய்தினார்.
|
(இ
- ள்.) செந்நெல் வெண்ணெல் விளையும் செறுக்களும் -
சிவப்பு நெல்லும் வெள்ளை நெல்லும் விளைகின்ற வயல்களும், கன்னல்
மன்னும் கழனியும் - கரும்புகள் நிறைந்து வளர்கின்ற வயல்களும்,
சோலையும் - சோலைகளும், அன்னம் ஆடும் தடமும் -அன்னங்கள்
மகிழ்ச்சியோடு வாழ்கின்ற குளமும், அகன்று போய் - கடந்துபோய்,
பன்ன சாலைப் பழுவத்துள் எய்தினார் - பன்னசாலையையுடைய
காட்டுக்குட் போனார்கள்.
|