பக்கம் எண் :


243

     (இ - ள்.) அலைகள் சாய்த்து அகல் வாவியின் மீன் எலாம் -
அலைகளை மோதி அகன்ற குளங்களிலுள்ள மீன்களெல்லாம், நிலைகள்
சாய்த்து அயல் நீங்கின - தங்கள் நிலைகளை விட்டுத் தூரத்தே போயின,
வாழைகள் குலைகள் சாய்த்து அயல் குப்புற்று நின்றன - வாழை
மரங்களெல்லாம் குலைதள்ளிப் பக்கத்தில் தலைகுனிந்து நின்றன,
சாலியின் ஈட்டம் தலைகள் சாய்த்தன - நெற்பயிர்க் கூட்டம் தலை
சாய்ந்து கிடந்தன.

     இதுவும் தற்குறிப்பேற்ற அணி, விசுவாமித்திரன் இனிமேற் செய்யத்
துணியும் வஞ்சச்செயல் குறித்து நாணி மீன்கள் அயல் நீங்கின, வாழைகள்
குலைசாய்த்து வளைந்தன, நெற்கதிர் தலை வளைந்து நின்றன எனக்
கற்பனை செய்தார்.
                                                    (23)

 
  கிளி, மயில், வண்டு கருத்துணராது களித்தன என்றல்   
482. எள்ளை யேயறி வற்றெடுத் தார்கையிற்
பிள்ளை ஆதலிற் பெய்ம்மலர்க் காவெலாம்
கிள்ளை பாடின கேகயம் ஆடின
கள்ளை உண்டலின் வண்டு களித்தவே.

     (இ - ள்.) கிள்ளை - கிளிகள், எடுத்தார் கையில் பிள்ளை
ஆதலின் - தம்மை எடுத்தவர் கைப்பிள்ளையாதலின், எள்ளை ஏய்
அறிவு அற்று - எள்ளளவுகூட அறிவின்றிச் சொன்னதையே
சொல்லுமாகலின் கௌசிகனின் தீய கருத்தை உணராது, மெய் மலர்க் கா
எலாம் - தேன் பொழிகின்ற சோலைகளில் எல்லாம், பாடின - பாடின,
கேகயம் ஆடின - மயில்கள் மயங்கி ஆடின, கள்ளை உண்டலின் வண்டு
களித்த - கள்ளுண்ட மயக்கத்தால் வண்டுகள் அறிவு மயங்கிக் கோசிகன்
கருத்துணராது களித்திருந்தன.

     எல்லா உயிர்களும் வருந்தவும் கிளி பாடுவதற்கும், மயில்
ஆடுவதற்கும், வண்டு களித்தற்கும் கவி கூறுங் காரணப்பொருத்தம்
பாராட்டற்பாற்று, 'எடுத்தார் கைப்பிள்ளை' - சிறிதும் ஆராயாது பிறர்
கூற்றினை உடன்பட்டு அவர் ஆட்டுவித்தபடி ஆடுகின்றவர்களைப் பற்றி
உலகத்தார் கூறும் பழமொழி இது.

     பெய்ம் மலர்: வினைத்தொகை. மலர்க்கா: இரண்டனுருபும் பயனும்
உடன்தொக்க தொகை.
                                                    (24)

 
  கௌசிகன் செயல் கண்டு நகர் நடுங்கியதாகக்
         கற்பித்தல்   
483. மாட மாளிகை மண்டப மாமதில்
ஆட ரங்கம் அகழிற் றுளங்குவ
கேட னெய்தக் கிடுகிடுக் கின்றபோல்
நாட நின்ற நகரிடை நண்ணினான்.