பக்கம் எண் :


244

     (இ - ள்.) மாடம் மாளிகை மண்டபம் மாமதில் ஆடு அரங்கம்
அகழில் - அயோத்தியின் மாட மாளிகைகள் மண்டபங்கள் பெரிய
மதில்கள் மகளிர் நடனசபைகள் அகழிகள் எல்லாம், கேடன் எய்த -
கேடு சூழ்கின்ற கோசிகன் வந்தவுடன், கிடுகிடுக்கின்ற போல் துளங்குவ
- அச்சத்தால் நடுங்குவனபோல அசைய, நாட நின்ற நகரிடை - முனிவர்
வருகையின் காரணத்தை ஆராய்வனபோல் பல்லியங்கள் பலபடி
முழங்குகின்ற அயோத்திநகரில், நண்ணினான் - கோசிக முனிவன்
அடைந்தான்.

     மாடமாளிகை மண்டபம் மதில் அரங்கம் அகழில்: எண்ணும்மைகள்
தொக்கன; கேடன்: தொழிலால் வருபெயர்; கிடுகிடுக்கின்ற:
இரட்டைக்கிளவி.
                                                    (25)

  கோசிகன் அரசிருக்கை மண்டபம் அணுகுதல்   
484. தளரி ளைப்பிற் றமனிய வாயில்புக்
களவில் செல்வத் தயோத்தியை நண்ணியே
கிளரொ ளிக்கதிர் கீழ்பட மேலுறீஇ
வளரொ ளிப்பெரு மண்டபத் தெய்தினான்.

     (இ - ள்.) தளர் இளைப்பில் - (மனத்தில் தீமை நிரம்பியிருத்தலின்
முனிவன் தளர்ச்சியோடுகூடிய களைப்பினால், தமனிய வாயில் புக்கு -
பொன் மதில் வாயிலுள் புகுந்து, அளவில் செல்வத்து அயோத்தியை
நண்ணி - அளவற்ற செல்வம் நிறைந்த அயோத்தியை அடைந்து, கிளர்
ஒளிக் கதிர் கீழ்பட மேல் உறீஇ - விளங்குகின்ற ஒளிபொருந்திய
கதிர்களையுடைய சூரியன் ஒளியினும் மேற்பட்ட ஒளிபொருந்தி, வளர்
ஒளி - மென்மேலும் வளர்கின்ற ஒளியுடைய, பெரு மண்டபத்து
எய்தினான் - பெரிய அரசவை மண்டபத்தை அடைந்தான்.

     கீழ் மேல் : முரண்தொடை; புக்கு - புகு : பகுதி; ஒற்று இரட்டித்து
இறந்தகாலங்காட்டியது;

     ஏகாரம் : அசை; உறீஇ : சொல்லிசை அளபெடை; வளர்ஒளி :
வினைத்தொகை. விசுவாமித்திரன் களைத்துப் போய் அரசவை
மண்டபத்தை யடைந்தான் என்பது.
                                                    (26)

 
   அரசன் வணங்கி வினாவுதல்   
485. மந்த ராசல மண்டபத் தெய்தலும்
அந்த மாதவற் கண்டரிச் சந்திரன்
எந்த மாதவ மோஅருள் இங்குநீ
வந்த காரணம் என்று வணங்கினான்.

     (இ - ள்.) அந்த மாதவன் - அந்தப் பெருந்தவ முனிவனாகிய
விசுவாமித்திரன், மந்தர அசல் மண்டபத்து எய்தலும் - மந்தரமலை
போன்ற சபாமண்டபம் அடைதலும், அரிச்சந்திரன் கண்டு - அரிச்சந்திர
அரசன் கண்டு, இங்கு நீ வந்த காரணம் எந்த மாதவமோ அருள் என்று
வணங்கினான். எனது சபைக்கு நீ எழுந்தருளி வந்தது நாங்கள் செய்த
அருந்தவத்தாலோ? எங்களுக்கு அருள் புரிவாயாக என்று துதித்து
வணங்கினான்.