பக்கம் எண் :


247

          புலி வருதல்
493. வானி மிர்ந்து வளைந்துடல் கூனிநீள்
கானி மிர்ந்துவெங் கண்கள் சிவந்துவிண்
மேனி மிர்ந்துவந் துற்றடர் வெங்கடல்
போனி மிர்ந்து வரும்புலி கோடியே.

     (இ - ள்.) வால் நிமிர்ந்து - வாலைச் தூக்கிக்கொண்டு, உடல்
வளைந்து கூனி - உடம்பை வளைத்துக் குனிந்துகொண்டு, நீள் கால்
நிமிர்ந்து - நீண்ட கால்களை நிமிர்த்திக்கொண்டு, வெம் கண்கள் சிவந்து
- கொடிய கண்கள் செந்நிறமாகி, விண்மேல் நிமிர்ந்து வந்து உற்று அடர்
வெங் கடல்போல் நிமிர்ந்து - வானத்தின்மேல் உயர்ந்து வந்து பொருந்தி
நெருங்குகின்ற வெம்மையான அலை மோதுகின்ற கடல்போல் தாவி, வரும்
புலி கோடி - வருகின்ற புலிகள் கோடிக்கணக்காகும்.

     கோடி என்பது எண்ணிறந்தன என்ற பொருளைத் தந்தது, புலியின்
இயற்கையை ஆசிரியர் வால் நிமிர்ந்து, உடல் வளைந்து கால் நிமிர்ந்து,
கண் சிவந்து வந்தன எனக் காட்டினர்.
                                                    (35)

 
          யானை வரவு
494. குளிறு மாமுகில் கூடிய வாமெனப்
பிளிறு கன்றும் பிடிகளும் பின்வர
வெளிறு தந்தக் கருநிற வெண்புகர்க்
களிறு கோடி கடிதுவந் துற்றவே.

     (இ - ள்.) குளிறும் மாமுகில் கூடிய ஆம் என - முழங்குகின்ற
பெரிய மேகங்கள் ஒன்றுகூடி வருவனபோல், பிளிறு கன்றும் பிடிகளும்
பின் வர - பிளிறுகின்ற (முழங்குகின்ற) யானைக் கன்றுகளும் பெண்
யானைகளும் பின்னர் வர, வெளிறு தந்தக் கருநிற வெண் புகர்க்களிறு -
வெண்மையான தந்தங்களையும் கருப்பான நிறத்தையும் வெண்மையான
புள்ளிகளையும் உடைய ஆண் யானைகள், கோடி கடிது வந்து உற்ற -
கோடிக்கணக்காக விரைந்து வந்து சேர்ந்தன.

     ஏகாரம் : ஈற்றசை; மா முகில் : உரிச்சொற்றொடர்; கருநிற
வெண்புகர்: முரண்தொடை.

     முழங்கும் கருமேகங்கள் ஒன்றுகூடி வந்தனபோலத் தோன்றின
யானைகள் வந்தகாட்சி என்க.
                                                    (36)

 
    பாம்புகள் வந்து சேர்தல்
495. கண்ணெ லாம்கனன் மண்டக் கடுவிட
மண்ணெ லாம்குதி கொள்ள மணிச்சுடர்
விண்ணெ லாம்வெயில் வீசிட வாய்பிளந்
தெண்ணி லாவர வெங்கும்வந் தீண்டின.