பக்கம் எண் :


251

     அனைத்தும்: முற்றும்மை: புகு: பகுதி; அ: பலர்பால் விகுதி. பகுதி
ஒற்று இரட்டித்து இறந்தகாலங் காட்டியது. முனிவனை வணங்கி அவ்வாறே
செய்யக் கருதி நாட்டின் புறங்களெல்லாம் புகுந்தன என்க.
                                                    (44)

 
   அரிச்சந்திரன் நாட்டினை யழித்தல்   
503. வெள்ளை ஆனிரை வெம்புலி கோளரி
கொள்ளை ஆடின கொல்லையும் சோலையும்
வள்ளை சூழும் வயலும் புனங்களும்
கிள்ளை தோகை கிளையொடு மொய்த்தவே.

     (இ - ள்.) வெள்ளை ஆன் நிரை - வெண்மையான
பசுக்கூட்டங்களை, வெம் புலி கோள் அரி கொள்ளை ஆடின -
கொடிய புலிகளும் வலிய சிங்கங்களும் முற்றிலும் கொன்று தின்றன,
கொல்லையும் சோலையும் வள்ளை சூழும் வயலும் புனங்களும் -
தோட்டங்களையும் சோலைகளையும் வள்ளைக் கொடிகள் படர்ந்த
வயல்களையும் தினைப்புனங்களையும், கிள்ளை தோகை கிளையொடு
மொய்த்த - கிளிகளும் மயில்களும் தங்கள் இனத்தோடு கூட்டமாய்ப்
போய்க் கொத்தித் தின்று அழித்தன.

     ஆ ஆன் : னகரமெய் சாரியை; தோகை : சினையாகுபெயர்;
வெம்புலி கோளரி: உம்மைத்தொகை, ஆன் நிரை எனவே ஆடுகளும்
எருமைகளும் அதன் இனமாதலின் அவற்றையும் அழித்தன எனக் கொள்க.
                                                    (45)

 
     மந்தி யானைகளின் செயல்   
504. அடர்ந்து மந்தியும் வண்டும் அகன்கடந்
தொடர்ந்து செல்வன சோலைகள் பாழ்படப்
படர்ந்து யர்ந்த பழுமரம் காய்மரம்
இடந்தி ரித்தன யானைகள் எங்குமே.

     (இ - ள்.) மந்தியும் வண்டும் - குரங்குகளும் வண்டுகளும்,
அடர்ந்து - நெருங்கி, அகல் கடம் தொடர்ந்து செல்வன - அகன்ற
காடுகளைத் தொடர்ந்து செல்வனவாய் அழித்தன, யானைகள் யானைகள்,
சோலைகள் படர்ந்து உயர்ந்த பழு மரம் காய் மரம் - சோலைகளில்
எல்லா இடங்களிலும் பரந்து உயர்ந்த பழுத்த மரங்களையும் காய்த்த
மரங்களையும், எங்கும் இடந்து இரித்தன - எங்கும் பிளந்து சாய்த்தன.

     வெல்வன என்னும்முற்று சென்று அழித்தன என்ற பொருளைக்
குறிப்பாலுணர்த்தியது. பழுமரம், காய்மரம்: வினைத்தொகை. இடந்து -
பிளந்து: இரித்தன - சாய்த்தன. இரிதல் - சாய்தல். யானைகள்
சோலைகளுட் புகுந்து பழுமரம் காய்மரங்களைப் பிளந்து சாய்த்தனவெனக்
கொள்க.
                                                    (46)