பக்கம் எண் :


258

எண்ணினான் எனக்கொள்க. திருவிளையாட்டு என்பது ஐங்கலப் பாரம்
சுமத்தல். சாத்தனுக்கு விளையாட்டு என்பது போல அத்துணை
முயற்சியின்றி எளிதாகச் செய்யவல்லவர் இறைவன் என்பதாம்.
                                                    (61)

 
  குடிமக்களுக்குத் தேறுதல் கூறிவிடுத்தல்   
520. அறைபு னற்றிரு நாடழி வுற்றதற்
கிறையு மக்கிரண் டாண்டினுக் கில்லெனாக்
குறைவி லாநிதி கூறை களித்துநீர்
உறையு மூர்தொறும் செல்லுமென் றோதினான்.

     (இ - ள்.) அறை புனல் திரு நாடு அழிவு உற்றதற்கு - ஒலிக்கின்ற
கங்கைநீரையுடைய அயோத்திநாடு அழிவடைந்ததற்கு, இறை உமக்கு
இரண்டு ஆண்டினுக்கு இல் எனா - உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரி
இல்லை என்று கூறிக், குறைவு இலாது - ஒரு குறைவு மில்லாத மிகுதியான,
நிதி கூறை அளித்து - பொருள்களும் உடைகளும் கொடுத்து, நீர்
உறையும் ஊர்தொறும் செல்லும் என்று ஓதினான் - நீங்கள் வாழ்கின்ற
சொந்த ஊர்களுக்குச் செல்லுங்கள் என்று சொன்னான்.

     அறை புனல்; வினைத்தொகை. எனா: செய்யா எனும வாய்பாட்டு
வினையெச்சம்: இலா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நிதி கூறை:
உம்மைத்தொகை. 'உங்கள் காடு தோட்டம் வயல் முதலியவை
யழிந்தனவெனில் வரி செலுத்தவேண்டாம். சோற்றுக்கும் உடைக்கும்
வேண்டும் பொருள் தருகிறேன்' என்று கூறிக்கொடுத்தான். வேற்றூர்
சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்றும் உரைத்தான் அரிச்சந்திரன்.
                                                    (62)

              வஞ்சனைக் காண்டம் முற்றிற்று.