பக்கம் எண் :


259

4. வேட்டஞ்செய் காண்டம்
 

       [வேட்டம்செய் காண்டம் - அரிச்சந்திரன் தன் நாட்டுக்
         குடிகளையும் பயிர்களையும் அழித்த விலங்குகளை
              வேட்டையாடுதலைக் கூறும் பகுதி.]

 
          கலி விருத்தம்
521. நிலவு காலு நெடுங்குடை மன்னவன்
புலவு வாய புலிமுதல் யாவையும்
சுலவு தானை தொடர்தர வேட்டஞ்செய்
செலவு மேவிய செய்தி விளம்புவாம்.

     (இ - ள்.) நிலவு காலும் நெடுங் குடை மன்னவன் - நிலவொளி
வீசுகின்ற நீண்ட வெண்கொற்றக் குடையையுடைய அரசன், புலவு வாய
புலி முதல் யாவையும் - ஊன் உண்ணுகின்ற வாயினையுடைய புலி முதலிய
காட்டு மிருகங்களை எல்லாம், சுலவு தானை தொடர்தர - சுற்றிவருகிற
சேனைகள் தன்னைத் தொடர்ந்து வர. வேட்டஞ் செய் செலவு மேவிய
செய்தி - வேட்டையாடச் செல்லுவது குறித்த செய்தியை, விளம்புவாம் -
சொல்லுவாம்.

     சுலவுதானை: வினைத்தொகை; நூலாசிரியர் ''இனி அரிச்சந்திரன்
சென்று வேட்டையாடி விலங்கினங்களை யழிக்குஞ் செய்தியை
விளம்புவோம்'' என்று கூறினர் என்பது.
                                                     (1)

 
     அரசன் அமைச்சரை வினவல்   
522. செல்லும் என்னப் பணிந்தவர் சேறலும்
வெல்லும் வெம்படை வேந்தன் அமைச்சர்காள்
கொல்லும் இந்தக் கொடுவினைக் கென்செய்கோ
சொல்லும் என்னத் தொழுதவர் சொல்லுவார்.

     (இ - ள்.) செல்லும் என்ன அவர் பணிந்து சேறலும் - தன்னிடம்
முறையிட்ட குடிகளைச் செல்லுங்கள் என்று அரசன் சொல்லக் குடிகள்
வணங்கிச் செல்லுதலும், வெல்லும் வெம் படை வேந்தன் - வெல்லுகின்ற
கொடுமையான படைகளையுடைய அரிச்சந்திரன் (அமைச்சர்களை நோக்கி,
அமைச்சர்காள் - அமைச்சர்களே!, கொல்லும் இந்தக் கொடுவினைக்கு
என்செய்கோ-கொல்லுகின்ற இந்தக் கொடிய செயலுக்கு
என்னசெய்வேனோ, சொல்லும் என - சொல்லுங்கள் என்று கட்டளையிட,
அவர் தொழுது சொல்லுவார் - அவர்கள் வணங்கிச் சொல்லுவார்கள்.

     அமைச்சர்கள்: விளிவேற்றுமை. செய்கோ - செய் : பகுதி; கு :
விகுதி, ஓ : வினா; செய்வேனோ என்பது பொருள். சேறல் - செல்: பகுதி;
தல் : தொழிற்பெயர் விகுதி.
                                                     (2)