பக்கம் எண் :


264

     வந்தனர் - வா: பகுதி: த் : சந்தி; ந் ஆனது விகாரம்; த்:
இறந்தகால இடைநிலை; அன்: சாரியை; அர்: பலர்பால் வினைமுற்று
விகுதி. கண்டிகை - பதக்கம். யானைக்கொம்பில் உண்டாகிய முத்தும்
குன்றி மணியும் கலந்து கோத்த மாலையும் பன்றிக்கொம்புப் பதக்கமும்
மார்பில் அணிந்து வந்தனர் சில வேடர் என்க.
                                                    (10)

 
  வெண்ணிற வேட்டை நாய் வரவு   
531.

பாச மிற்றிட விசித்தசங் கிலிகள்
   பற்ற றத்தமி லழன்றுவெம்
பூச லிட்டன லெனச் சினத்துறு
   புணர்ச்சி யின்மிகும் உணர்ச்சியாய்க்
கேச ரிக்குருளை என்னஊ ளைபயில்
   கீதை ஓதைதிசை நாலினும்
வீச முற்செல நெருக்க முற்றுவரு
   வெண்சு ணங்குசத கோடியே.

     (இ - ள்.) பாசம் இற்றிட - கட்டிய கயிறுகள் அறுந்து போக,
விசித்த சங்கிலிகள் பற்று அற - கட்டின சங்கிலிகள் தொடர் விட, தமில்
அழன்று -தங்களுக்குள்ளே பகைத்து, வெம் பூசல் இட்டு - கொடிய
சண்டையிட்டு, அனல் எனச் சினத்து - தீயெனக் கோபங்கொண்டு, உறு
புணர்ச்சியின் மிகும் உணர்ச்சியாய் - பொருத்தமான பெண் நாய்களோடு
கூடவேண்டுமென்ற உணர்வுடையனவாய், கேசரிக் குருளை என்ன -
சிங்கக்குட்டிகள் போல, ஊளை பயில் கீதை - ஊளையிடுகின்ற இனிய
கீதம் போன்ற, ஓதை - ஒலியானது, திசை நாலினும் வீச - நான்கு
திக்குகளிலும் பரவும்படி, முற்செல நெருக்க முற்று வரு வெண் சுணங்கு
- முன்னே சென்று ஓடுவதற்காக நெருக்கிக் கொண்டு வருகின்ற வெள்ளை
நாய்கள், சத கோடி - நூறு கோடிக் கணக்கானவை.

     தமில் : தொகுத்தல்; நாலினும் : முற்றும்மை; வெண் சுணங்கு :
பண்புத்தொகை. நூறு கோடி என்பது கணக்கில்லாதன என்ற பொருளைத்
தந்தது. நாய்கள் ஒன்றோடொன்றுபகை கொண்டன போலக் குரைப்பதும்,
கயிறுகளை யறுப்பதும், சங்கிலிகளை இழுத்து முறிப்பதும், புணர்ச்சிக்குரிய
உணர்ச்சியுடன் செல்வதும் நாய்களின் இயற்கை. அவ்வியற்கையைக்
கூறினர் என்று கொள்க.
                                                    (11)

 
      செந்நிற நாய் வரவு  
532. அந்த ரத்திடிஎ னக்கு ரைத்துமுதி
   ராழிபோ லுறுமி வார்தடம்
கந்த ரத்திறுக நின்று ரப்பியிரு
   கால்மடக் கிஎதிர் தாவியே
தந்த மிற்கறுவு கொண்டு பல்பல
   தயங்க வெங்கன றடங்கணாற்
சிந்தி டச்சருவி முன்க தித்துவரு
   செஞ்சு ணங்குசத கோடியே.