பக்கம் எண் :


267

வாய்களில் வெண்மையான நுரைகள் விளங்க, நா முழம் இறங்க - நாக்கு
ஒரு முழும் தொங்க, அலை எழும் சலதி ஒலி எனக் கதறி - அலை
வீசுகின்ற கடலொளிபோன்று கதறிக்கொண்டு, அணி கரும் பகடு இழுக்க
- அழகிய கருத்த எருமைகள் இழுக்க, நீள் வலைகளும் திரையும் வாரும்
வன் கயிறும் - பெரிய வலைகளும் திரைகளும் தோல் வாரும்
வன்மையான கயிறுகளும், வந்த வன் சகடு - ஏற்றி வந்த பெரிய
வண்டிகள், அனந்தம் -பலவாகும்.

     வன் கயிறு : பண்புத்தொகை; மால் வரை : உரிச்சொற்றொடர்;
நிறீஇ : சொல்லிசையளபெடை; இறக்கி : பிறவினை; வெண்ணுரை :
பண்புத்தொகை; வண்டிகள் எருமைக்கடா இழுக்க, வலையும் திரையும்
வாரும் கயிறும் ஏற்றி வந்தன. இவற்றில் வலை கட்டவும் திரை
கூடாரமடித்துத் தங்கவும், வார்கள் நாய்களுக்குக் கழுத்திலணியவும்,
கயிறுகள் விலங்குகளைப் பிடிக்கவும் பயன்படும் எனக் கொள்க.
                                                    (15)

 
  வேடுவர் அரசவையில் அரிச்சந்திரனை வணங்கல்   
536. இமைய மந்தர முதற்ற டங்கிரியும்
   இதனி டைப்படு சுரங்களும்
அமையும் வேடுவ ரனந்த கோடியர்
   அணைந்து மேருவரை அன்னதோர்
சமைய மண்டப நிறைந்தி ருந்ததிரி
   சங்கு மைந்தனை வணங்கியே
எமைஅ ழைத்தபணி விடைஉ ரைத்தருள்க
   என்று மண்மிசை இறைஞ்சினார்.

     (இ - ள்.) இமையம் மந்தரம் முதல் தடங் கிரியும் - இமையமலை
மந்தரமலை முதலிய பெரிய மலைகளிலும், இதன் இடைப்படு சுரங்களும்
- இவற்றின் இடையே அமைந்த பாலைவனங்களிலும், அமையும் வேடுவர்
அனந்தகோடியர் - வாழ்கின்ற வேடர்கள் எண்ணிறந்தவர்கள், அணைந்து
- வந்து, மேரு வரை அன்னது ஓர் சமைய மண்டபம் நிறைந்திருந்த -
மேருமலை போன்ற ஓர் அரசிருக்கை மண்டபத்தில் கூடி நிறைந்திருந்த,
திரிசங்கு மைந்தனை வணங்கி-திரிசங்கு மகனான அரிச்சந்திரனை
வணங்கி, எமை அழைத்த பணிவிடை உரைத்தருள்க என்று - எங்களை
அழைத்ததற்குரிய தொழில் இன்னது என்றுரைத்தருள்க என்று, மண் மிசை
இறைஞ்சினார் - பூமியில் விழுந்து வணங்கினார்கள்.

     ஏகாரம் : அசை; தடங்கிரி : உரிச்சொற்றொடர்; வேடுவர்கள்
பணிந்து நாங்கள் என்ன செய்யவேண்டும் எங்களை யழைத்த காரணங்
கூறியருள்க எனக் கேட்டனர் என்பது.
                                                    (16)

    அரிச்சந்திரன் வேடர்களை வேட்டைக்குச் செல்லப் பணித்தல்   

537. சிங்கம் ஆனைபுலி பன்றி மான்மரை
   திரண்ட ணைந்துதிரு நாடெலாம்
எங்க ணும்பாலி வந்து தண்பயிரி
   யாவை யும்கெட வழித்தலால்
அங்க வற்றைவதை செய்வ தற்குமை
   அழைத்த னன்கடிது சென்மென
உங்க ளுக்குதவி யாக யாம்வருத
   லுண்டே னப்பல உணர்த்தினான்.