பக்கம் எண் :


271

    வேடர்கள் வேட்டையாடல்
542. சிலைஎ டுத்தபுய மன்ன னைத்தொழுது
   சென்று வேடுவர் பரந்துநீள்
அலைஎ டுத்தமலர் வாவி யும்வயலும்
   அகழும் அம்பொழில் அடங்கலும்
வலைஎ டுத்தருகு திரைவ ளைத்துமணி
   வாரொ ழுக்கிஇடை கூஎனக்
கலைஉ ழைத்திரள்கள் கடமை பன்றிபுலி
   கரடி கோளரிக லந்தவே.

     (இ - ள்.) வேடுவர் - வேடர்கள், சிலை எடுத்த புயமன்னனைத்
தொழுது சென்று - வில்லேந்திய தோள்களையுடைய அரசனை வணங்கிச்
சென்று, பரந்து நீள் அலை எடுத்த மலர் வாவியும் - பரந்து பெரிய
அலைகள் வீசும் பூக்களையுடைய குளங்களிலும், வயலும் அகழும் -
வயல்களிலும் அகழிகளிலும், அம் பொழில் அடங்கலும் - அழகிய
சோலைகள் முழுதும், வலை எடுத்து - வலை கட்டி, அருகு -
பக்கங்களில், திரை வளைத்து - திரைகளைச் சுற்றிக் கட்டி, மணி வார்
ஓழுக்கி - அழகிய வார்களையும் கட்டிச் சேர்த்து, இடை கூ என -
அவ்விடங்களினூடே நின்று கூ என்று சத்தம் போட, கலை உழை
திரள்கள் கடமை பன்றி புலி கரடி கோள் அரி - கலைமான்களும்
புள்ளிமான் கூட்டங்களும் கடமைகளும் பன்றிகளும் புலி கரடிகளும்
வலிமை மிக்க சிங்கங்களும், கலந்த - வந்து கூடின.

     ஏகாரம் : ஈற்றசை; வேடர்கள் வலைகட்டித் திரை வளைத்து
வாரினால் இறுகக் கட்டிப் பின்னர் ஒலி எழுப்பி விலங்குகளைக்
கலைத்தனர் எனவும் அவை வந்து கூடின எனவுங் கொள்க.
                                                    (22)

 
543. ஏன மெண்குபுலி யாளி சிங்கமத
   யானை சம்புழைபுல் வாய்மரை
கான மோரிகட மாவழுங் கிரலை
   நாலி யூகமெலி யாகணில்
கான மேதிவரை யாடு டும்புமுயல்
   கால்வி சைத்திடை கலந்தன
வான கத்திடைப றந்தெ ழுந்தபல
   வன்சிறைப் பறவை வர்க்கமே.

     (இ - ள்.) ஏனம் எண்குபுலி யாளி சிங்கம் மதயானை சம்பு
உழை புல்வாய் மரை நானம் ஓரி கடமா அழுங்கு இரலை நாவி ஊகம்
எலி ஆகு அணில் கானமேதி வரையாடு உடும்பு முயல் - பன்றிகள்
கரடிகள் புலிகள் யாளிகள் சிங்கங்கள் மதயானைகள் நரிகள் புள்ளி
மான்கள் கருமான்கள் மரைமான்கள் சவ்வா துப்பூனைகள் கிழநரிகள்
காட்டுப்பசுக்கள் அழுங்குகள் கலைமான்கள் புழுகுப்பூனைகள்
கருங்குரங்குகள் எலிகள் பெருச்சாளிகள் அணில்கள் காட்டெருமைகள்
மலை ஆடுகள் உடும்புகள் முயல்கள், கால் விசைத்து இடை கலந்தன
கால் வேகங்கொண்டு அந்த இடத்திற்கு ஓடிவந்து கூடின, வான்
அகத்திடை - வானத்தில், பல வன் சிறைப் பறவை வர்க்கம் - பல
வலிமையான சிறகையுடைய பறவைக் கூட்டங்கள், பறந்து எழுந்த -
பறந்து மேலே உயர்ந்து வந்து கூடின.