பக்கம் எண் :


272

     ஏகாரம் : ஈற்றசை, ஏன முதல் முயல் வரையும் கூறிய
விலங்குகள் எல்லாம் அவ்விடத்திற்கு வந்து கூடின. பறவைகள் எல்லாம்
பறந்தோடின என்பது.
                                                    (23)

 
544. வட்ட மாகவரி விற்கு னித்துவய
   மன்னர் விட்டபல வன்சரம்
பட்ட மாவினம் விழுந்து ழன்றுடல்
   பதைத்தி றந்தனவ னந்தமாற்
றொட்ட வேல்குணி லெறிந்து வேடுவர்
   துணித்த மாஇனம் அனந்தமால்
விட்ட ஞாளிகள் கடித்தி ழுத்திட
   விழுந்த மாவினம் அனந்தமால்.

     (இ - ள்.) வய மன்னர் - வெற்றி வேந்தர்கள், வட்டமாக
வரிவில் குனித்து விட்ட - வளைவாகக் கட்டமைந்த வில்லைக் குழைத்து
எய்த, பல வன் சரம் - பல வலிய அம்புகள், பட்ட மாவினம் - தைக்கப்
பெற்ற மிருகங்கள், விழுந்து உழன்று உடல் பதைத்து இறந்தன அனந்தம்
- கீழே விழுந்து துன்புற்று உடல் நடுங்கி இறந்தவை மிகப் பல,
வேடுவர் தொட்ட வேல் குணில் எறிந்து துணித்த மா இனம் அனந்தம்
- வேடர்கள் கையினால் வேலையும் குறுந்தடிகளையும் எறிந்து துண்டு
செய்த மிருகக் கூட்டங்கள் மிகப் பல, விட்ட ஞாளிகள் - இவ்
வேடர்கள் ஏவி விட்ட வேட்டைநாய்கள், கடித்து இழுத்திட விழுந்த
மா இனம் அனந்தம் - கடித்து இழுத்தலால் கீழே விழுந்து இறந்த
மிருகக்கூட்டங்கள் மிகப் பல.

     வேல் குணில் : உம்மைத்தொகை; ஆல் : அசைகள்; இறந்தன;
பலவின்பால் வினையாலணையும் பெயர்; துணித்த, விழுந்த:
பெயரெச்சங்கள். அம்பாலும் குணிலாலும் வேலாலும் விலங்கினங்கள்பல
கொல்லப்பட்டன. நாய்களும் கடித்திழுத்துப் பல விலங்கினங்களைக்
கொன்றன என்பது.
                                                    (24)

 
  விலங்கு, பறவைகள் உயிர் போய் விழல்
545. தண்ட லைப்படு விலங்கி னிற்படு
   சரங்க ளும்துணி சிரங்களும்
திண்டி றற்குமரர் மண்டலத் தலைவர்
   செங்கை யிற்செறிவி லுண்டையும்
விண்ட லத்தில்உயர் வன்சி றைப்பறவை
   மீதுபட் டுயிரி ழந்துபோய்
மண்ட லத்தில்இடம் இன்றிஎத் திசையும்
   வந்து வீழ்வன அனந்தமே.

     (இ - ள்.) தண்டலைப் படு விலங்கினிற் படு சரங்களும் -
சோலைகளில் பொருந்தியிருக்கின்ற மிருகங்கள் மேற் பட்ட அம்புகளும்,
துணி சிரங்களும் - வெட்டப்பட்ட தலைகளும், திண் திறல் குமரர் -
மிக வலிய வீரர்களும், மண்டலத் தலைவர் - மண்டலத் தலைவர்களும்,
செங்கையிற் செறி வில் உண்டையும் - தங்கள் சிவந்த கைகளில்
கொண்டு வீசிய வில்லுருண்டைகளும், விண்தலத்தில் உயர்
வன்சிறைப்பறவை மீது பட்டு - வானத்தில் உயரப்பறந்த
சிறகுகளையுடைய பறவைகளின்மேல் பட்டு, உயிர் இழந்து போய் -
அதனால் உயிர் விட்டு இறந்துபோய், மண் தலத்தில் இடம் இன்றி
எத்திசையும் வந்து வீழ்வன அனந்தம் - பூமியில் இடமில்லாமல்
எல்லாத் திசைகளிலும் வந்து விழுகின்றவை எண்ணற்றவை.

     படுசரம் : வினைத்தொகை; துணி சிரம் - துணிக்கப்பட்ட
சிரம்.செயப்படுபொருள் செய்ததுபோல் கூறப்பட்டது. திசையும் : உம்மை
முற்றும்மை. வீழ்வன : பலவின்பால் வினையாலணையும் பெயர்;


     ஏகாரம் : ஈற்றசை, விலங்குகளின்மேற்பட்டு ஊடுருவி மேலே
சென்ற அம்புகளும், அச் சரங்களாற் றுண்டுபட்டுமேலே சென்ற
விலங்குகளின் தலைகளும், இளைஞரும் தலைவரும் கைவில்லில்
வைத்துத் தொடுத்த உருண்டைகளும் பட்டுப் பறவைகள் மடிந்தன என்க.
                                                    (25)

 
546. வேல்கள் பட்டவொரு கோடி கோடிவிறல்
   வில்உ மிழ்ந்தசுடு பல்கொடுங்
கோல்கள் பட்டவொரு கோடி கோடிஎறி
   குணில்கள் பட்டவொரு கோடிதேர்க்
கால்கள் பட்டவொரு கோடி கோடிஎறி
   கவண்உ மிழ்ந்தபல கற்கள்பட்
டோல மிட்டவொரு கோடி கோடிசிலை
   உண்டை பட்டவொரு கோடியே.

     (இ - ள்.) வேல்கள் பட்ட ஒரு கோடி கோடி - வேற்படையால்
இறந்தவை கோடிக்கணக்கானவை, விறல் வில் உமிழ்ந்த சுடு பல்
கொடுங்கோல்கள் பட்ட ஒரு கோடி கோடி - வலிய வில்லினால்
எய்யப்பட்ட சுடுகின்ற பல கொடுமையான பாணங்கள் பட்டு வீழ்ந்தன
கோடானுகோடியாகும், எறி குணில்கள் பட்ட ஒரு கோடி - எறியப்பட்ட
வளை தடிகளால் பட்டவை ஒரு கோடியாகும். தேர்க்கால்கள் பட்ட
ஒரு கோடி கோடி - தேர்ச்சக்கரங்கள் பட்டு நசுங்கினவை
கோடானுகோடியாகும், ஏறி கவன் உமிழ்ந்த பல கற்கள் பட்டு
ஓலமிட்ட ஒரு கோடி கோடி - எறிகின்ற கவண்களினின்று விழுகின்ற
பலகற்கள் பட்டு அலறி வீழ்வன கோடானுகோடி, சிலை உண்டை பட்ட
ஒரு கோடி - வில்லுண்டைபட்டு வீழ்வன ஒரு கோடி.

     பட்ட : பலவின்பால் வினையாலணையும் பெயர்.

     ஏகாரம் : ஈற்றசை, வேலாலும் கோலாலும் குணிலாலும்
தேர்க்கால்களாலும் கவண் கற்களாலும் வில்லுருண்டைகளாலும்
விலங்கினங்கள் பல கோடிக் கணக்காக மாண்டன என்க. குணில் -
குறுந்தடி, வளைதடி என்பதும் அது.
                                                    (26)