(இ - ள்.)
போர் அடித்த விதியவன் போன்று - நானே முதற்
கடவுள் என்று திருமாலோடு சொற்போர் புரிந்த பிரமன் சிவபெருமானின்
அழலுருவைக் கண்டு அஞ்சியது போல, மூன்று ஊர் அடித்தவன் ஊர்தி
என்று மட அன்னம் எண்ணி - முபரங்களையும் அழித்த சிவபெருமானது
வாகனம் என்று (எருது) என்று இள அன்னம் நினைத்துப் (பயந்து), ஏர்
அடிப்ப - உழவர்கள் எருதுகளைப் பூட்டி ஏரடிக்கும்போது, இரு சிறையும்
கொடு மார் அடித்து இரியும் - தன் இரண்டு சிறகுகளையுங் கொண்டு
தனது மார்பில் அடித்துக் கொண்டு பறந்து ஓடும்.
சிவபெருமானைக் கண்டு நான்முகன் பயந்ததுபோலச்
சிவபெருமானது
ஊர்தியாகிய எருதினைக் கண்டு நான்முகனது ஊர்தியாகிய அன்னம்
பயந்தது என்பதாம். வயல்களிலும் வரப்புகளிலுமிருந்தால் எருது
உழும்போது விடும் பெருமூச்சில் அன்னத்தின் சிறகுகள் சிதைவுறுமென்று
அன்னம் பயந்து ஓடியது என்பதைத் தன் ஊர்தி நாயனாகிய அயன்
சிவனைக் கண்டு அஞ்சினமையின் தானும் சிவனது ஊர்தியாகிய
இடபத்தைக் கண்டு அஞ்சியது எனக் கவி தாம் குறித்த குறிப்பை ஏற்றிக்
கூறுதலின் தற்குறிப்பேற்ற அணி.
காளையின் பெருமூச்சில் பறவைகளின் இறகுகள் இற்றொடியும்
என்பதைக் காஞ்சிபுராணத்தில் திருமால் கயிலையில் சிவபெருமானை
வழிபடச் சென்றபோது தமது ஊர்தியாகிய கருடனை இடபத்தின்
பக்கத்தில் நிறுத்திச் சென்றமையும் இடபம் மூச்சு விடும்போது கருடன்
அங்கும் இங்கும் அலைப்புண்டு இடருற்றமையும் கூறும் பகுதியிற் காண்க.
"அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலரேல் இருவருந்தஞ்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ"
என்ற திருவாசக மணிமொழியால் அயன் மால் செருக்கினை நீக்க அரன்
அழலுருக்கொண்டமை காண்க.
மார்பில் அடித்தல் அச்சத்தால் இதயம் துடிப்பவராற்றும்
செயலாகும்.
வேகமாக மேலெழுந்து பறத்தற்கு இருசிறகுகளையும் முழுதும் விரித்து
அடித்தலை மாரடித்தலாகக் கூறுகிறார்.