பக்கம் எண் :


30

     அயன், முன் வினைப்பயனை எடுத்த பிறவியில் உயிர் நுகரும்படி
அரன் ஆணையால் விதிப்படி வகுத்து வரையுந் தொழிலினனாதலின்,
'விதியவன்' என்ற காரணப்பெயர் பெற்றான். இரு சிறையும் - முற்றும்மை;
கொடு : தொகுத்தல் விகாரம்; மார் : மார்பு என்றதன் மரூஉ. மட
அன்னம் : பண்புத்தொகை. ஏகாரம் : தேற்றம்.

     கவியின் சிவபரத்துவக் கருத்தினை இச் செய்யுள் புலப் படுத்துகிறது.
                                                    (36)

 

 
  எருதின் குளம்புகள் பூந் தாது படிந்து
    பொன்னுரைகற் போன்றன
51. நன்னு ரைத்தட நாண்மலர்த் தாதுறீஇப்
பன்னு ரைத்த பகட்டின் பதக்களம்
பென்னு ரைப்ப திடமற வெங்கணும்
பொன்னு ரைத்த நிறத்தகற் போன்றவே.

     (இ - ள்.) பல் நுரைத்த பகட்டின் பதக் குளம்பு - மெய் வருந்தி
உழுததினால் பற்களில் நுரை கக்கிய எருதுகளின் கால்களிலுள்ள
குளம்புகளுக்கு, என் உரைப்பது - எதனை உவமை கூறுவது, நல் நுரைத்
தடம் நாள் மலர்த் தாது இடம் அற எங்கணும் உறீஇ பொன் உரைத்த
நிறத்த கல் போன்ற - (அவை) நல்ல நீர் நுரைகளையுடைய குளத்தில்
அன்றலர்ந்த தாமரைப் பூந்தாது வெற்றிடம் இல்லாமல் முழுதும்
பொருந்தப்பெற்று, பொன் னுரைத்த நிறத்தோடு கூடினவாகிய
உரைகற்களை ஒத்திருந்தன.

     உவமை அணி, உறீஇ : சொல்லிசை யளபெடை. குளம்பு : பால்பகா
அஃறிணைப்பெயர்; நிறுத்த : குறிப்பு வினையாலணையும் பெயர்;
கற்போன்ற : இரண்டனுருபுதொக்கது. பன்னுரைத்த பகட்டின் பதக் குளம்பு
இடம் அற எங்கணும் நன்னுரைத் தடநாண் மலர்த் தாதுறீஇ.
பொன்னுரைத்த........போன்ற என்னுரைப்பது எனக் கூட்டினும் பொருந்தும்.
என்னுரைப்பது - அதன் சிறப்பை எவ்வாறு கூறுவது என்றும் பொருள்
கொள்ளலாம்.
                                                   (37)


  உழவர் செந்நெல்லும் வெண்ணெல்லும் விதைத்தல்
52. தொக்க வேதியர்க் கும்துற வோர்கட்கும்
தக்க தானம் தருபவர் போலவே
பக்க நோக்கிப் பலிப்பறிந் தெங்கணும்
மிக்க செந்நெலும் வெண்ணெலும் வித்தினார்.

     (இ - ள்.) தொக்க வேதியர்க்கும் துறவோர்கட்கும் தக்க தானந்
தருபவர் போல - தொகுதியாகச் சேர்ந்து கூடியிருக்கின்ற மறையவர்க்கும்
துறவிகளுக்கும் தக்க முறையில் பொருள் வழங்குபவர் போல, பக்கம்
நோக்கிப் பலிப்பு அறிந்து - நிலத்தின் தன்மையையும் விளைவின்
அளவையும் ஆராய்ந்து, எங்கணும் மிக்க செந்நெலும் வெண்ணெலும்
வித்தினார் - எல்லா இடங்களிலும் செந்நிற நெல் விளையும் இடங்களில்
செந்நெல் விதையும் வெண்மைநிற நெல் விளையும் இடங்களிலும்
வெண்ணெல் விதையும் விதைத்தார்கள்.