பக்கம் எண் :


290

     (இ - ள்.) பாகரின் மிக்கவன் - தேர் ஓட்டும் பாகரில்
வலியவன், நான்மறை முற்று எதிர் பாகு குறித்தவனும் - நான்கு
வேதங்களைக் கற்றுச் சிவனுடைய தேரைச் செலுத்தும் பிரமனைப்
போன்றவனும் ஆகிய பாகன், சாகரம் உற்று எழு பானு குலத்து இறை
தாள் இணையைத் தொழுது - கடலில் தோன்றுகின்ற சூரியகுலத்தில்
பிறந்த அரிச்சந்திரனுடைய திருவடிகளை வணங்கி, நாகரிகச் சுடர் ஆடு
அரவப் பணி நாயகி - சிறப்பான ஒளிவீசுகின்ற மணியை உடைய ஆடும்
பாம்பை ஆபரணமாகக்கொண்ட காளிதேவி, பொன் சடில சேகரி -
பொன் சடையையுடையவள், பத்திரகாளி - பத்திரகாளி என்னும் தெய்வம்,
கொடுத்தருள் தேரை நடத்தினன் - கொடுத்தருள் செய்த தேரைச்
செலுத்தினான்.

     அரிச்சந்திரன் புறப்பட்டவுடன் தேர்ப்பாகனும் அம் மன்னனை
வணங்கிக் காளி கொடுத்த தேரைச் செலுத்தினன்.
                                                    (62)

 
       மன்னன் செலுத்தும் தேரின் விரைவு
583.

படியும் இடிந்தது பொடியும் எழுந்தது பலபல பைம்பொழிலும்
மடிய விழுந்தன ககன மடர்ந்துயர் வரையும் நெரிந்தனவான்
முடியும் அதிர்ந்தது கதிரும் மறைந்தது முகிலும் முழன்றதுநீ
ரிடியும் முதிர்ந்தது சொடிமலை யும்சுடர் இரதம்ந டந்திடவே.

     (இ - ள்.) கொடி மலையும் சுடர் இரதம் நடந்திட -
கொடிகட்டிய ஒளிவீசும் தேர் சென்றபோது, படியும் இடிந்தது - பூமியும்
இடிந்து பள்ளமாயிற்று, பொடியும் எழுந்தது - தூளி எழுந்து பரந்தது. பல
பல பைம்பொழிலும் மடிய விழுந்தன பலவிதமான சோலைகளும் சாய்ந்து
விழுந்தன, ககனம் அடர்ந்து உயர் வரையும் நெரிந்தன - வானம்
வரையில் அடர்ந்து உயர்ந்த மலைகளும் நெரிந்தன, வான் முடியும்
அதிர்ந்தது - வான முகடும் அதிர்ந்தது, கதிரும் மறைந்தது - கதிரவனும்
மறைந்தது, முகிலும் உழன்றது - மேகங்களும் அலைந்தன, நீர் இடியும்
உதிர்ந்தது - நீர் நிறைந்த மேகத்திலிருந்து இடி உதிர்ந்தது.

     தேர்ப்பாகன் தேரைக் கடாவியபோது அது செல்லும் விரைவினால்
பூமி இடிந்து பொடியெழுந்தது: சோலைமரங்கள் சாய்ந்தன : மலை
நெரிந்தன ; வானமுகடு நடுங்கின; மேகம் அலைந்தது; இடி யுதிர்ந்தது
என்க.
                                                    (63)

584. மாறுப டச்சில தேர்என உற்றெழு மால்வரை யத்தனையும்
நீறுப டப்பட நாடி மணிச்சுடர் நேமிநெ ரித்தனவால்
ஆறுப டப்பட ஊறுபு னற்றிரை ஆழியை ஒத்திடவே
வீறுப டத்துயர் கான மனைத்தையும் வேரொடெ டுத்தனவே.

     (இ - ள்.) மாறுபட சில தேர் என உற்றெழும் மால் வரை
அத்தனையும் மாறுபட்டுச் சில தேர் என்று சொல்லும்படி உயர்ந்த பெரிய
மலைகள் எல்லாம், நீறுபடப்பட - துகளாகும்படி, நாடி - அப் பன்றியைத்
தேடிக்கொண்டு, மணிச் சுடர் நேமி நெரித்தனவால் - செல்லும் தேரின்