பக்கம் எண் :


295

  பன்றியால் இறந்த தன் சேனைகளைக் கண்டு மன்னன்
             வருந்துதல்
  
593. புரவ லனப்படை கரிபரி பட்டதொர் புதுமை தனைத்தெரிசித்
தரகர விப்படி விளைவதெ னக்குன தருளின்நெ றிச்செயலென்
றிருகரம் வைத்திரு செவியை மறைத்தெழின் முடியை அசைத்
                                          [தெரிரே
துரக நடத்திட விரைவின் இழுத்தன சுடர்இர தத்தினையே.

     (இ - ள்.) புரவலன் அப் படை கரி பரி பட்டது ஓர்
புதுமைதனைத் தெரிசித்து - மன்னன் தன் படையும் யானைகளும்
குதிரைகளும் இறந்த புதுமையைக் கண்டு, அரகர இப்படி எனக்கு
விளைவது உனது அருளின் நெறிச் செயல் என்று - சிவனே ! இப்படி
எனக்கு நேர்ந்தது உனது கருணையோ என்று, இரு கரம் வைத்து இரு
செவியை மறைத்து - இரண்டு கைகளாலும் இரண்டு காதுகளையும்
மூடிக்கொண்டு எழில் முடியை அசைத்து - அழகான தலையை அசைத்து,
எதிரே துரகம் நடத்திட - எதிரில் குதிரைகளைச் செலுத்தியபோது, சுடர்
இரதத்தினையே விரைவில் இழுத்தன - ஒளிவீசும் தேரினை விரைவாக
அவை இழுத்துச் சென்றன.

     அரிச்சந்திரன் 'அரகர ! இப்படி விளைவது உன் அருள் நெறியோ'
என வருந்தித் தேரைச் செலுத்தினன். அப்போது குதிரைகளும் இழுத்துச்
சென்றன என்பது.
                                                    (73)

 
  மன்னன் ஒரு குளத்தின் கரையை அடைதல்   
594. ஏனம் விழுந்தயர் மால்வரை கண்டதின் ஏறிஇ ழிந்தகலப்
போனது ணர்ந்தடி மீதுதொ டர்ந்துபு காதவ னங்கள்புகுந்
தானன முந்திரு மேனியும் நுண்பொடி ஆடம
   
                           டந்தையுடன்
மானவன் வந்தொரு வாசநெ டும்புனல் வாவிஅ
   
                           ணைந்தனனே.

     (இ - ள்.) ஏனம் விழுந்து அயர் மால் வரை கண்டு - பன்றி
விழுந்து சோர்ந்த பெரிய மலையைக் கண்டு, அதின் ஏறி இழிந்து -
அதன்மேல் ஏறி இறங்கி, அகலப் போனது உணர்ந்து அடிமீது
தொடர்ந்து - பன்றி அவ்விடத்தை விட்டு நீங்கியதை அறிந்து அதன்
காலடிச் சுவட்டைக் கண்டு தொடர்ந்து, புகாத வனங்கள் புகுந்து -
புகமுடியாத வனங்களில் புகுந்து, ஆனனமும் திருமேனியும் நுண் பொடி
ஆட - முகத்திலும் உடம்பிலும் நுண்ணிய தூளிகள் பட, மானவன்
மடந்தையுடன் வந்து ஒரு வாச நெடும் புனல் வாவி அணைந்தனன் -
மன்னவன் தன் மனைவி சந்திரவதியுடன் வந்து மணம் வீசும் மலர்
நிறைந்த குளத்தின் கரையை அடைந்தான்.

     மன்னவன் பன்றி விழுந்த மலையைக் கண்டு அப் பன்றியின்
அடிச் சுவட்டை நோக்கி நெடிதுதூரஞ் சென்று நுழைதற்கரிய
வனங்களில் நுழைந்து பின் மடந்தையுடன் வாவி யணைந்தனன் என்க.
                                                      (74)