|
குளத்தின்
சிறப்பு |
595. |
கானின்
மிசைத்தெழு தாமரை யிற்படர் காவிக ளிற்படரும் தேனின் முழக்கொலி நாலு திசைத்திசை
சேரவி யப்புறுமால்
மீனின் முழக்கொலி ஊழித னிற்கடை வேலையை ஒப்பதுநீள்
வானின் முழக்கொலி போல்வன சக்கர வாகம் இரைப்பதுவே. |
(இ
- ள்.) கானின் மிசைத்து எழு தாமரையில் - காடுபோல்
உயர்ந்து வளர்ந்த தாமரை மலர்களிலும், காவிகளில் - நீலோற்பல
மலர்களிலும், படரும் தேனின் முழக்கு ஒலி நாலு திசைத்திசை சேர -
மொய்க்கும் வண்டுகளின் பாட்டு ஒலியானது நான்கு திசைகளிலும் பரவ,
வியப்பு உறுமால் - வியப்பைத் தருவதாய் இருக்கும்? மீனின் முழக்கு
ஒலி ஊழிதனில் கடை வேலையை ஒப்பது - மீன்கள் அலம்புதலால்
உண்டாகும் ஒலி ஊழிக்காலத்தில் வரும் வெள்ளத்தைப் போன்றதாகும், சக்கரவாகம் இரைப்பது
- சக்கரவாகப் பறவை ஒலிப்பது, நீள் வானின்
முழக்கு ஒலி போல்வன - பெரிய வானத்தில் முழங்குகின்ற ஒலி
போன்றதாகும்.
தாமரைக்
காடு எனப் பாரதம் கூறுகின்றது. தாமரையின்
தொகுதியைக் காடு என்பது வழுக்கு. அவ் வாவியில் வண்டின்
முழக்கமும் மீனின் முழக்கமும் யுகமுடிவுக் கடலொலி போன்றிருந்தன.
சக்கரவாகப் புள்ளோலி வன் முழக்கம்போலிருந்தது.
(75)
596. |
தமர
நெடுந்திரை எறிகுரை யும்பல சகுனமு ழங்கிரையும்
அமர மடந்தையர் குடைஒலி யும்பல அருவி விழுங்கலியும்
திமிர மதங்கய நிறைவுற மொண்டறல் சிதறதிர் வுங்குரவம்
கமழ்தரும் அவ்வன முனிவர் கமண்டல களக ளெனும்
தொனியும்.
|
(இ - ள்.)
தமரம் நெடும் திரை எறி குரையும் -
முழக்கத்தையுடைய பெரிய அலைகள் வீசுகின்ற ஒலியும், பல சகுனம்
முழங்கு இரையும் - பல பறவைகள் முழங்குகின்ற ஒலியும், அமர
மடந்தையர் குடை ஒலியும் - தேவமகளிர் நீராடுகின்ற ஒலியும், பல
அழுவி விழும் கலியும் - பல மலையருவிகள் விழுகின்ற ஒலியும், திமிர
நிற கயம் நிறைவுற மொண்டு அறல் சிதறு அதிர்வும் - இருள் நிறமான
யானைகள் துதிக்கையினால் நீரை நிறைய மொண்டு சிந்துகின்ற ஒலியும்,
குரவம் கமழ் தரும் அவ் வனமுனிவர் கமண்டல கள கள எனும்
தொனியும் - குரவமலர் மணம் வீசுகின்ற அக் காட்டில் வாழும் முனிவர்
நீர் முகத்தலால் கமண்டலத்திலிருந்து உண்டாகும் கள கள என்னும்
ஒலியும், 'பின்வரும் தணியா (77) என்ற வினைமுற்றுடன் சேர்ந்து முடியும்.
"குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும்". இச் செய்யுள்
பொருள்
முடிவு பெறாது எச்சமாய் நின்று வருஞ் செய்யுளில் முற்றுப் பெறுகின்றது.
ஆதலால் குளகம் எனப்படும். குரை, இரை, ஒலி, கலி, அதிர்வு, தொனி
என்பன ஒருபொருட் பன்மொழிகள். பொருட் பின் வருநிலையணி இது.
(76)
|