பக்கம் எண் :


298

       அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
599. முளரிசெங் குமுதம் நீலம் முண்டகம் குவளை வெள்ளை
கிளர்நறு மலர்க ளெல்லாம் கிளையொடு மலியப் பூத்த
அளவிலா மதியம் மீனும் மருக்கரு மலிய வண்டம்
வளர்புவி தனினும் வேதா வகுத்தன போன்ற அன்றே.

     (இ - ள்.) முளரி செங்குமுதம் நீலம் முண்டகம் குவளை -
தாமரையும் செவ்வல்லியும் நீலமலரும் செந்தாமரை மலரும் குவளை
மலரும். வெள்ளை கிளர் நறும் மலர்கள் எல்லாம் - வெள்ளை நிறம்
விளங்கப் பெற்ற மலர்கள் பலவும், கிளையொடும் மலியப் பூத்த - தம்
இனத்தோடு மிகுதியாகப் பூத்திருந்த காட்சி, அளவிலா மதியும் மீனும்
அருக்கரும் மலிய - அளவில்லாத நிலாக்களும் விண் மீன்களும்
கதிரவர்களும் நிறையும்படி, அண்டம் வளர் புவி தனினும் வேதா
வகுத்தன போன்ற அன்றே - பிரமதேவன் வானத்தைப் பூமியிலும்
படைத்தது போன்று இருந்தது.

     பிரமன் வானத்தைப்போல மண்ணிலும் விண் மீன்களும்
வெண்ணிலவும், சூரியரும் விளங்கப் படைத்தது போன்று அவ் வாவி
தோன்றிற்று.
                                                    (79)

 
600. மண்கொளா ததனு ணீரும் வளைகளும் மலரும் மீனும்
விண்கொளா ததனுள் வைகும் வெண்குரு கன்ன நாரை
பண்கொள்வாய் வண்டு வைகும் பதுமத்தின் பரப்பு நோக்கிற்
கண்கொளா மனமும் கொள்ளா காவியும் அன்ன தேயால்.

     (இ - ள்.) அதனுள் நீரும் வளைகளும் மலரும் மீனும் மண்
கொள்ளாது - அக் குளத்தில் நீரும் சங்கும் மலர்களும் மீன்களும் இம்
மண்ணுலகம் கொள்ளாத அளவு மிகுந்துள்ளன, அதனுள் வைகும் வெண்
குருகு அன்னம் நாரை விண் கொளாது - அக் குளத்தில் வெண்மையான
அன்னப்பறவைகளும் நாரைகளும் வானம் கொள்ளாத அளவு
மிகுந்துள்ளன, பண் கொள்வாய் வண்டு வைகும் பதுமத்தின் பரப்பு
நோக்கின் - இசை பாடும் சிறப்புடைய வண்டுகள் மொய்க்கின்ற
தாமரைமலரின் மிகுதியை நோக்கினால், கண்கொள்ளா - கண்
பார்வைக்கு அடங்காத அளவு மிகுந்துள்ளது, மனமும் கொள்ளா -
மனத்துக்கும் அடங்காது காவியும் அன்னதே - நீலோற் பலமலரும்
அவ்வளவாக மிகுந்துள்ளது.

     அவ் வாவியில் நீர், சங்கு, மலர், மீன் இவை மண்ணிலடங்காதன;
கொக்கு அன்னம் நாரை விண்ணிலடங்காதன; வண்டுகள்
தாமரையிலிருப்பவை கண்ணுக்கடங்காதன; மனத்துக்கும் எட்டாதன.
நீலமலரும் அத்தன்மையதே என்பது.
                                                    (80)