பக்கம் எண் :


299

601. மீதெலாந் தரங்க மஃதின் மேலெலாம் கமலப் போது
போதெலாம் சங்கம் சங்கின் புடைஎலாம் பொருந்து தாது
தாதெலாம் வண்டு வண்டின் றளெலாம் செழுந்தேன் மற்றும்
ஈதலா லில்லை அந்த விரும்புனற் றடத்தி லம்மா.

     (இ - ள்.) மீது எலாம் தரங்கம் - அக் குளத்து நீரின்மேல்
எல்லாம் அலைகள் தோன்றின, அஃதின்மேல் எலாம் கமலப்போது -
அந்த அலையின்மேல் தாமரைமலர்கள் இருந்தன, போது எலாம் சங்கம்
- தாமரைமலரின்மேல் சங்குகள் இருந்தன, சங்கின் புடை எலாம்
பொருந்து தாது - சங்கின் பக்கங்களில் எல்லாம் பொருந்திய
மகரந்தப்பொடி நிறைந்திருந்தன, தாது எலாம் வண்டு - மகரந்தப்
பொடிகளில் வண்டுகள் மொய்த்திருந்தன, வண்டின் தாள் எலாம்
செழுந்தேன் - வண்டினுடைய கால்களில் எல்லாம் செழுமையான தேன்
படிந்திருந்தது, அந்த இரும் புனல் தடத்தில் ஈது அலால் இல்லை -
அந்த நீர் நிறைந்த குளத்தில் இஃது அன்றி வேறு பயனற்ற பொருள்கள்
இல்லை.

     அவ் வாவியின்மேல் அலையும் அவ்வலைமேல் தாமரைமலரும்,
அம் மலர்மேற் சங்குகளும் அவற்றின் பக்கங்களில் மகரந்தமும் அதன்
மேல் வண்டுகளும் வண்டுகளின் கால்களில் தேனும் பொருந்தியிருந்தன.
வேறு சிறப்பில்லாத பொருள்கள் ஒன்றும் அவ் வாவியில் இல்லை.
                                                    (81)

 
        குளம் ஒரு மங்கையைப் போன்றது   
602. பங்கய முகமும் கண்ணும் பாதமும் பணைத்த பாரக்
கொங்கையும் சைவ லப்பூங் கூந்தலும் குமுத வாயும்
செங்கயற் கண்ணும் வள்ளைத் திருநெடுங் குழையும் காட்டி
மங்கைபுட் கரணி என்பாள் வள்ளலை உள்ளம் கொண்டாள்.

     (இ - ள்.) மங்கை புட்கரணி என்பாள் - புட்கரணி்ப்
பெயருடைய குளம் என்னும் மங்கை, பங்கய முகமும் கண்ணும் பாதமும்
- தாமரைமலர் என்ற முகமும் கண்ணும் கால்களும், பணைத்த பாரக்
கொங்கையும் - தாமரை அரும்பு என்ற பருத்த பாரமான கொங்கைகளும்,
சைவலப் பூங்கூந்தலும் - பாசி என்னும் பொலிவுபெற்ற கூந்தலும், குமுத
வாயும் - அல்லிமலர் என்ற வாயும், செங் கயல் கண்ணும் - சிவந்த
கயல்மீன் என்ற கண்களும், வள்ளைத் திரு நெடும் குழையும் காட்டி -
வள்ளையிலை என்ற அழகிய நீண்ட காதுகளும் காட்டி, வள்ளலை
உள்ளங்கொண்டாள் - மன்னனுடைய உள்ளத்தைக் கவர்ந்தான்.

     தாமரைமலர் முகம், கண், கால் இவற்றுக்கு உவமை. தாமரை
அரும்பு - கொங்கை போன்றது. இச் செய்யுளில் பங்கயம் சைவலம்
குமுதம் முதலியன பெண்ணின் உறுப்புகளாக உருவகப்படுத்தி உள்ளனர்.
புட்கரணி என்பது பொய்கையின் பெயர். புட்கரணி என்ற அப்
பொய்கையின் அழகு மன்னவன் கண்ணும் மனமும் கவர்ந்தது.
                                                    (82)