பக்கம் எண் :


3

தொல்லை ஓருருவாய்ப் பிறங்கும் வடிவம் "தோலும் துகிலும் குழையுஞ்
சுருள் தோடும், பால் வெள்ளை நீரும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்,
சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக், கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ" என்ற மணிமொழியால் அறிக. அண்டத்தும்
தாவரத்தும் சங்கமத்தும் நின்றோன் - சத்தியும் சிவமுமாய தன்மை
இவ்வுலகமெல்லாம். திருவடி புனைதலாவது - இறைவனுடைய திருவருளில்
அடங்கி முனைப்பின்றி நின்று அறிதலும் வினை செயலுமாம்.
                                                          (3)

          அருவவுருவ வணக்கம்
4. புகலரிய சதுமறையாய் மறைப்பொருளாய்உபநிடத்தாய்ப்
   பூதம் ஐந்தாய்
அகிலமுமாய் மன்னுயிராய் அணுவிலணு வாய்அவற்றின்
   அகமாய் மேலாய்ப்
பகல்இரவென் றறியாத பராபரமாய் அறுசமயப்
   பகுதி ஆகிச்
சகலமுமாய் நிட்களமாய் நின்றோன்தன் செழுங்கமலச்
   சரண்புக் கேமால்.

     (இ - ள்.) புகல் அரிய சது மறையாய் - உண்மை இலக்கணத்தை
உரைக்க ஒண்ணாத நான்கு வேதங்களாகியும், மறைப்பொருளாய் -
வேதத்தின் பொருளாகியும், உபநிடத்தாய் - வேதத்தின் முடிவாகிய
உபநிடதப் பொருளாகியும், பூதம் ஐந்தாய் - நிலம், நீர், தீ, வளி, வான்
முதலிய ஐம்பூதங்களையும், அகிலமுமாய் - உலகெல்லாமாகியும்,
மன்னுயிராய் - நிலைபெற்ற உயிர்க்கு உயிராகியும், அணுவில் அணுவாய் -
அணுவுக்கணுவாகிய நுண்பொருளாகியும், அவற்றின் அகமாய் மேலாய் -
அவற்றின் அகமாயும் புறமாயும் அவற்றின் உயர்ந்த, பகல் இரவு என்று
அறியாத பராபரமாய் - நினைப்பும் மறப்பும் கால எல்லையும் கடந்த
ஒப்புயர்வற்ற பரம்பொருளாய், அறுசமயப் பகுதி ஆகி - அறுவகைச்
சமயத்தினர்க்கும் அவரவர் உணர்கின்ற முதற்பொருளாய், சகலமுமாய்
நிட்களமாய் நின்றோன் தன் - உருவமும் அருவமும் அருவுருவமுமாக
நின்ற சிவபெருமானுடைய, செழுங்கமலச் சரண் புக்கேம் - செழுமையான
தாமரை மலர்போன்ற திருவடிகளில் அடைக்கலம் புகுந்தேம்.

     மறை, சிவவணக்கத்தையே இலைமறை காய்போல் மறைத்து
வைத்துக் கூறுதலின் வேதங்களுக்குக் காரணப்பெயராயிற்று. பூதங்களிலும்
உலகிலும் உயிரிலும் உள்ளும் புறமுமாய்க் கலந்து நிற்றல் பற்றி 'பூதமாய்
உலகமாய் உயிராய்' என்றார். அவற்றினும் வேறானவர் என்பது மேலாய்
பராபரமாய் என்றமையாற் பெறப்படும்.

     "இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாய்எரியும் காற்று மாகி
     அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி"
எனவும்,