பக்கம் எண் :


302

     முனிவர் நீங்கினர்; மாலை மறைந்து இருளாயிற்று; அரிச்சந்திரன்
கூடாரத்துட் புகுந்தான். இனிமேல் விசுவாமித்திரன் சூழ்வினை சிந்திக்கத்
தொடங்குகின்றான் என்பது கருத்து.
                                                    (87)

 
608. கடாத்தடங் களிறு மாவும் சேனையும் கண்க டுஞ்ச
விடாப்படை வேந்தர் தாமும் அமைச்சரும் விழிக டுஞ்சக்
கெடாப்பெரும் குணத்து வள்ளல் கிளிமொழி மயிலோ டம்பொற்
படாத்திடைப் பரியங் கத்துப் பஞ்சணைப் பள்ளி கொண்டான்.

     (இ - ள்.) கடாத் தடங் களிறும் மாவும் சேனையும் கண்கள்
துஞ்ச - மதநீர் சிந்துகின்ற பெரிய யானைகளும் குதிரைகளும் சேனை
வீரர்களும் தூங்க, விடாப் படை வேந்தர் தாமும் அமைச்சரும் விழிகள்
துஞ்ச - நீங்காத சேனைகளையுடைய மன்னர்களும் அமைச்சர்களும்
கண் துயில, கெடா பெருங் குணத்து வள்ளல் - கெடாத நல்ல
குணத்தையுடைய வள்ளலாகிய அரிச்சந்திரன், கிளி மொழி மயிலோடு
- கிளி போன்ற மொழியினையும் மயில் போன்ற சாயலையும் உடைய
சந்திரமதியோடு, அம்பொன் படாத்திடை - அழகிய பொன் வேலைப்பாடு
அமைந்த கூடாரத்தில், பரியங்கத்தில் - கட்டிலின்மேல், பஞ்சணை
பள்ளிகொண்டான் - பஞ்சணையிலே படுத்துக் தூங்கினான்.

     சந்திரமதியுடன் அரிச்சந்திரன் கூடாரத்துட் படுத்து உறங்கினான்;
படைகளும் அரசர் அமைச்சர் முதலியவரும் உறங்கினர் என்பது.
                                                    (88)

 
        மன்னன் கனவு காணுதல்   
609. பூவல யத்தை மூடும் புதைஇரு ளறச்செஞ் சூட்டுச்
சேவலார்ப் பெடுப்பக் கீழ்பாற் செங்கதிர் வந்து தோன்ற
யாவரும் உணர்ந் தெழுந்தா ரிளங்கொடி யுடன் றுயின்ற
காவலன் றானு மற்றோர் கனவுகண் டுணர்ந் தெழுந்தான்.

     (இ - ள்.) பூவலயத்தை மூடும் புதை இருள் அற - பூமியை
மூடுகின்ற கவிந்த இருள் நீங்க, செஞ்சூட்டுச் சேவல் ஆர்ப்பெடுப்ப
- சிவந்த கொண்டையை உடைய சேவற்கோழிகள் ஒலியெழுப்பி
ஆரவாரம் செய்ய, கீழ்பால் செங்கதிர் வந்து தோன்ற - கீழ்திசையிலே
சூரியன் வந்து தோன்றியவுடன், யாவரும் உணர்ந்து எழுந்தார் -
எல்லோரும் துயிலுணர்ந்து எழுந்தனர், இளங்கொடியுடன் துயின்ற
காவலன் தானும் - இளங்கொடி போன்ற சந்திரமதியுடன் தூங்கிய
மன்னனும், ஓர் கனவு கண்டு உணர்ந்து எழுந்தான் - ஒரு கனவினைக்
கண்டு கண் விழித்து எழுந்தான்.

     விடியற்காலமாயிற்று; எல்லோரும் துயிலுணர்ந்து எழுந்தனர்;
அரசன் கனவு கண்டு துயினீங்கி யெழுந்தனன்.
                                                    (89)