பக்கம் எண் :


303

610. மன்னவன் றுணுக்கம் கண்டு வல்லியும் பல்கா னோக்கி
என்னைநின் மனதில் எண்ணம் இயம்புகென் றிறைஞ்ச லோடும்
கன்னன்மென் மொழியா யானோர் கனவுகண் டுணர்ந்தே
                                         னென்ன
பின்னரக் கனவி னீர்மை பேசெனப் பேசல் உற்றான்.

     (இ - ள்.) வல்லியும் மன்னவன் துணுக்கம் கண்டு - வல்லிக்
கொடி போன்ற சந்திரமதியும் அரிச்சந்திரனுடைய நடுக்கத்தைக் கண்டு,
பல்கால் நோக்கி - பலமுறை பார்த்து, என்னை நின் மனத்தில் எண்ணம்
இயம்புக என்று இறைஞ்சலோடும் - உன் மனத்தில் தோன்றிய எண்ணம்
யாது சொல்லுக என்று வணங்கியவுடன், கன்னல் மென்மொழியாய் யான்
ஓர் கனவு கண்டு உணர்ந்தேன் என்ன - கரும்புபோலும் இன்மொழி
புகலும் பெண்ணே! யான் ஒரு கனவு கண்டு கண்விழித்தேன் என்றவுடன்,
பின்னர் அக் கனவின் நீர்மை பேசு என பேசலுற்றான் - பின்பு அக்
கனவின் தன்மையை நீ கூறுக என்றவுடன் மன்னன் கூறத் தொடங்கினான்.

     மன்னவன் எழுந்து நடுங்கினன், அது கண்ட சந்திரமதி என்ன
காரணம் என வினவினள், கனவு கண்டேன் என்றான்; அக் கனவினை
விளக்கமாகக் கூறுக எனக் கேட்டாள் சந்திரமதி; பின் அரசன் கூறுவான்.
                                                    (90)

 
611. அமைச்சரைத் தூதர் ஓடி அழைக்கஎன் றரசன் கூற
இமைப்பினில் சென்ற ழைத்தா ரியாவரும் விரைவின் வந்தார்
சமைத்ததீ வினையை வென்றான் றாமரைச் சரணம் போற்றி
எமைக்கடி தழைத்த வாறென் னிறைவநீ அருள்க என்றார்.

     (இ - ள்.) அரசன் அமைச்சரைத் தூதர் ஓடி அழைக்க என்று
கூற - அரசன் 'அமைச்சரை அழைத்து வருக என்று தூதரிடம்
கூறியவுடன், இமைப்பினில் சென்றழைத்தார் - தூதர் இமை நேரத்தில்
சென்று அழைத்தனர், யாவரும் விரைவின் வந்தார் - எல்லோரும்
விரைவாக வந்தனர். சமைத்த வினையை வென்றான் தாமரைச் சரணம்
போற்றி - முனிவரால் உண்டாக்கப்பட்ட விலங்குகளின் கொடிய
தீச்செயல்களையெல்லாம் வென்ற மன்னனுடைய தாமரை போன்ற
கால்களை வணங்கி, எமைக் கடிது அழைத்தவாறு என் - எம்மை
விரைவாக அழைத்ததற்கு காரணம் என்ன?, இறைவ நீ அருள்க
என்றார் - இறைவனே! நீ சொல்லியருள்க என்றனர்.

     மந்திரியை யழைத்து வருக என்று மன்னன் கூறினன், தூதர்
கூறியவுடன் எல்லாரும் வந்தனர், அரசனை வணங்கி அழைத்தது என்ன
காரணம் என்று கேட்டனர். தாமரைச் சரணம் : உவமைத்தொகை.
                                                    (91)

 
612. மற்றவர் கூறக் கேட்டு வையகம் எல்லாம் காக்கும்
கொற்றவ னின்றி யானோர் கொடியதீக் கனவு கண்டேன்
உற்றது கேட்டு மேல்வந் துறுகிற முரைமி னென்னாக்
கற்றடந் தோளி னார்க்குக் கனாநிலை கூறல் உற்றான்.