பக்கம் எண் :


309

     ஆளாகக் கொள்ளுதல் - அடிமையாகக் கொள்ளுதல்.
அரிச்சந்திரனுடைய வலிமை தோன்ற, "உன்னரு ளுடையேற் கல்லால்
உய்வுண்டோ" எனப் பன்றி கூறியது. உன்னருள் இல்லையெனில்
பிழைத்து வரமாட்டேன் என்பது குறிப்பு.
                                                     (2)

 
621. கோலத்தின் உரையைக் கேளாக் கோசிகன் வடவைச் செந்தீச்
சீலத்திற் சிவந்த கண்ணன் சிந்தையும் அனையன் ஊழிக்
காலத்திற் கடுங்கால் அன்ன மூச்சினன் கடலிற் றோன்று
மாலத்தின் கிளர்ச்சி அன்ன கோபத்தன் அழன்றே ழுந்தான்.

     (இ - ள்.) கோசிகன் கோலத்தின் உரையைக் கேளா -
விசுவாமித்திரமுனிவன் பன்றி கூறிய மொழிகளைக் கேட்டு, வடவைச்
செந்தீ சீலத்திற் சிவந்த கண்ணன் - கடலுக்குள் இருக்கும் வடவை
என்னும் நெருப்புப் போன்ற சிவந்த கண்களை உடையவனாய்,
சிந்தையும் அனையன் - மனமும் அத்தன்மைய சினம் உடையவனாய்,
ஊழிக் காலத்தில் கடுங்கால் அன்ன மூச்சினன் - உலகத்தின்
முடிவுகாலத்தில் வீசுன்ற கடுங்காற்றுப் போன்ற மூச்சு உடையவனாய்,
கடலில் தோன்றும் ஆலத்தின் கிளர்ச்சி அன்ன கோபத்தன் - கடலில்
தோன்றிய ஆலகாலம் என்னும் நஞ்சின் பெருக்கைப்போன்ற சினம்
உடையவனாய், அழன்று எழுந்தான் - சினங்கொண்டு கொதித்து
எழுந்தான்.

     முனிவனுடைய சினத்தின் மிகுதி இச் செய்யுளில் கூறப்பட்டது.
வடவை நெருப்பு என்பது கடலினுள் இருந்து கடல் நீர் மிகுந்த வெள்ளம்
உண்டாகாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறது என்பர் அறிஞர். கண்ணன்,
அனையன் மூச்சினன், கோபத்தின் என்ற குறிப்பு வினைமுற்றுக்கள்
வினையெச்சப்பொருளைத் தந்தன.
                                                     (3)

 
622. பேச்சினில் கிளிபோல் செங்காற் பெயர்ச்சியிற் பெடைபோல்
   
                                       செங்கை
வீச்சினின் மின்போல் சீற்ற மிகுதியான் முனிவன் விட்ட
மூச்சினில் பிறந் திரண்டு மோகினி மாதர் ஆழி
நீச்சினில் நிலைத்து நிற்கும் நீலமென் கொடிபோல் நின்றார்.

     (இ - ள்.) முனிவன் சீற்றம் மிகுதியால் விட்ட மூச்சினில் -
விசுவா மித்திரமுனிவன் தன் சினத்தின் மிகுதியால் வெளிவிட்ட மூச்சுக்
காற்றில், இரண்டு மோகினி மாதர் பிறந்து - இரண்டு அழகிய
மோகினிப்பெண்கள் பிறந்து, பேச்சினில் கிளிபோல் - பேசும் மென்
மொழிகளால் கிளிபோலவும், செங்கால் பெயர்ச்சியில் பெடை போல்
- சிவந்த கால்களால் நடக்கும் நடையில் அன்னப்பேடு போலவும்,
செங்கை வீச்சினில் மின் போல் - சிவந்த கைகளை வீசி நடத்தலில்
மின்னல் போலவும், ஆழி நீச்சினில் நிலைத்து நிற்கும் நீலமென்
கொடிபோல் நின்றார் - நீந்திச் செல்லும் ஆழமான கடலில் நிலைத்து
நிற்கின்ற நீல மலர்க் கொடிபோலவும் நின்றனர்.