பக்கம் எண் :


315

     அரிச்சந்திரன் எப்பொழுதும் புண்ணியமே செய்பவன் ஆதலால்
'புண்ணியம் திரண்ட யாக்கைப் புரவலன்' எனக் கூறினார். எய்தா :
(எய்தி) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கரிய செவ்வேல் :
முரண்தொடை.
                                                    (14)

 
633. பெடைநடை மடவீர் வாவிப் பெருங்கரை தன்னில் வந்த
படையுடை வேந்தன் பாற்போய்ப் பாடலால் உருக்கி வேற்றிக்
குடையினைக் கொண் மினல்லாற் கலவியைக் கொண்மி
                                         னென்னா
விடைகொடுத் திடலும் மாதர் விரைவினிற் றொழுது போனார்.

     (இ - ள்.) பெடை நடை மடவீர் - அன்னப்பெடை போன்ற
நடையினையுடைய பெண்களே, வாவிப் பெருங் கரை தன்னில் வந்த -
குளத்தின் கரையில் வந்து தங்கியுள்ள, படையுடை வேந்தன்பால் போய்
- சேனைகளையுடைய அரசனிடம் சென்று, பாடலால் உருக்கி
வெற்றிக்குடையினைக் கொண்மின் - உங்கள் இசைப்பாடலால் அவன்
மனத்தை உருக்கி அவனுடைய வெற்றிக்குடையைப் பரிசாகப்
பெற்றுக்கொள்ளுங்கள், அல்லால் கலவியைக் கொண்மின் என்னா -
இஃது இல்லையானால் அவனுடன் கலந்து மகிழ்தலைக் கொள்ளுங்கள்
என்று, விடை கொடுத்திடலும் - முனிவன் விடை கொடுத்தனுப்பியவுடன்,
மாதர் விரைவினில் தொழுது போனார் - பெண்கள் விரைவில் அம்
முனிவனை வணங்கிச் சென்றனர்.

     மன்னனை மனம் உருக்கத் தம்மால் இயலுமோ என மாதர்
ஐயங்கொள்வர் ஆதலின், அவர் வல்லமையைப் புலப்படுத்த முனிவன்
அவர்களைப் புகழ்ந்து 'பெடை நடை மடவீர்' என்றான். குடையினைப்
பெற்றால் அரசைப் பெற்றது போன்றதாகும். கலவியைப் பெற்றாலும்
மன்னனை இழிவுடையவனாக்கியதாகும். ஆதலால் 'வெற்றிக்
குடையினைக் கொண்மின் அல்லால், கலவியைக் கொண்மின்' என
முனிவன் கூறியனுப்பனான்.
                                                    (15)

 
634. எடுத்தநல் மகர யாழும் ஏந்திய குழலும் தோன்ற
உடுத்தமே கலையும் செம்பொற் சிலம்புநின் றோசை காட்டத்
தொடுத்தபூங் கோதை சோரத் துணைமுலை ததும்பி விம்ம
அடுத்தபூஞ் சோலை நீங்கி யகன்புனற் பொய்கை புக்கார்.

     (இ - ள்.) எடுத்த நல் மகர யாழும் ஏந்திய குழலும் தோன்ற -
கையில் எடுத்த மகர யாழ் என்னும் இசைக்கருவியும் புல்லாங் குழலும்
தெரியவும், உடுத்த மேகலையும் செம்பொன் சிலம்பும் நின்று ஓசை காட்ட
- இடையில் அணிந்துள்ள மேகலை என்னும் அணியும் காலில்
அணிந்துள்ள சிலம்பும் ஓசை எழுப்ப, தொடுத்த பூங்கோதை சோர -
காட்டப்பட்ட பூமாலை துவள, துணை முலை ததும்பி விம்ம - இரண்டு
முலைகளும் அசைந்து பெருகவும், அடுத்த பூஞ்சோலை நீங்கி அகன்
புனல் பொய்கை புக்கார் - அடுத்திருந்த பூஞ்சோலையை விட்டு நீங்கி
அகன்ற நீர் நிறைந்த குளத்தின் கரையினை அடைந்தனர்.

     மன்னன் மனத்தை மாற்றும் நோக்குடன் செல்பவர் ஆதலின்
அப் பெண்கள் இசைக்கருவிகளோடு மலர்மாலை துவளக் காமக்குறிப்பு
வெளிப்படச் சென்றனர் என்க.
                                                    (16)