635. |
கனைகழற்
கடுங்காற் சேனைக் கடலினிற் சென்று புக்க
வினைநெடு வேற்க ணாரை அருள்பொழி விழியால் நோக்கி
இனையரென் றவரைத் தேறா தையற வெய்தும் எல்லை
புனைஇழை மாதர் வந்து புரவலற் போற்றி நின்றார். |
(இ
- ள்.) கனை கழல் கடுங் கால் சேனைக் கடலினிற் சென்று
புக்க - ஒலிக்கும் வீரக்கழலை அணிந்த விரைந்து செல்லும்
கால்களையுடைய சேனையாகிய கடலினிடத்துச் சென்று புகுந்த, வினை
நெடுவேல் கணாரை - வேலைப்பாடு அமைந்த நீண்ட வேல் போன்ற
கண்களையுடைய பெண்களை, அருள் பொழி விழியால் நோக்கி -
மன்னன் தன்னுடைய கருணை பொழியும் கண்களால் பார்த்து, இளையர்
என்று அவரைத் தேறாது ஐயுறவு எய்தும் எல்லை - இன்னார் என்று
அவர்களைத் தெரிந்துகொள்ளாமல் மன்னன் ஐயம்கொண்ட நேரத்தில்,
புனை இழை மாதர் வந்து புரவலன் போற்றி நின்றார் -
அணிகளையுடைய பெண்கள் வந்து மன்னனை வணங்கி நின்றனர்.
கண்ணாரை
என்பது 'கணாரை' எனத் தொகுத்தல் விகாரம் பெற்று
வந்தது. அருள் பொழி விழியால் என்றதனால் மன்னன் காமக்குறிப்பு
இல்லாதவன் என்பது புலப்படும். இங்கு வரும் பெண்கள் யாவர் என்று
நோக்கி நமது நகரப் பெண்களோ, அயல் நாட்டுப் பெண்களோ என
ஐயுற்றான் அரசன் என்று கொள்க. யார் என்று வினவுவதற்கு முன்னரே
விரைவில் வந்து வணங்கினர் என்பது தோன்ற 'எல்லை' என்றார்.
(17)
636. |
தோளுமத்
தோளிற் சாத்தும் சுடர்மணி வலய மும்செந்
தாளும்அத் தாளில் வீரக் கழலும்நேர் தாழ்ந்த கையும்
வாளும்நீண் மாலை மார்பும் வதனமும் நோக்கி மார
வேளும்நே ரில்லான் தன்னைப் புகழ்ந்தனர் வியந் துரைப்பர். |
(இ - ள்.)
தோளும் அத் தோளிற் சாத்தும் சுடர்மணி வலயமும்
- மன்னனுடைய தோள்களையும் அத் தோள்களில் அணிந்துள்ள சுடர்
வீசும் தோள்வளைகளும், செந் தாளும் அத் தாளில் வீரக்கழலும் -
அவனுடைய சிவந்த கால்களையும் அக் கால்களில் அணிந்துள்ள
வீரக்கழல்களையும், நேர் தாழ்ந்த கையும் - முழங்காலுக்கு நேராக
நீண்டு தாழ்ந்த கைகளையும், வாளும் - வாளையும், நீள் மாலை மார்பும்
வதனமும் நோக்கி - நீண்ட மாலை அணிந்த மார்பினையும் முகத்தையும்
பார்த்து, மாரவேளும் நேர் இல்லான் தன்னைப் புகழ்ந்தனர் வியந்து
உரைப்பர் - மன்மதனும் ஒப்பு ஆகமாட்டான் என்னுமாறு அழகு பெற்று
விளங்கும் மன்னனைப் புகழ்ந்து வியந்து பாராட்டிக் கூறுவாராயினர்.
முழந்தாள் வரை கை நீண்டிருத்தல் மன்னர்க்குரிய
உறுப்பிலக்கணம். மணம் விரும்பும் மகளிர் முதலில் ஆடவருடைய
அழகையே விரும்புவர் ஆதலின் ஈண்டு மன்னனுடைய அழகிய
கோலத்தை விளக்கிக் கூறினார்.
(18)
|