637. |
யாணர்க்குள்
யாண நின்னை எய்துதற் கிழைத்த வேதா
வீணர்க்குள் வீணன் எம்மை விதித்த அன்றிந்தி ரர்க்கும்
வாணர்க்கும் அனந்த னார்க்கும் வாய்த்த வாறேபோல
நின்னைக்
காணற்குத் தொழற்கு வாழ்த்தக் கண்கைநாப் படைத்தி லானே. |
(இ
- ள்.) யாணர்க்குள் யாண - அழகர்க்குள் அழகனே,
நின்னை எய்துதற் கிழைத்த வேதா - உன்னைச் சேர்வதற்கு எங்களைப்
படைத்த நான்முகன், வீணர்க்குள் வீணன் - பயனற்ற செயல்
செய்பவர்களிற் சிறந்தவன் (ஏனெனில்), எம்மை விதித்த அன்று -
எம்மைப் படைத்த அந்நாளில், இந்திரற்கும் வாணர்க்கும்
அனந்தனார்க்கும் வாய்த்த வாறே போல் - இந்திரனுக்கு ஆயிரம்
கண்களும் வாணாசுரனுக்கு ஆயிரம் கைகளும், ஆதிசேடன் என்னும்
பாம்புக்கு ஆயிரம் தலைகளும் வாய்க்கும்படி செய்ததுபோல, நின்னைக்
காணற்கு தொழற்கு வாழ்த்த கண் கை நா படைத்திலானே - நின்னைக்
காண்பதற்கும் வணங்குதற்கும் வாழ்த்துதற்கும் ஆயிரக்கணக்கான
கண்களையும் கைகளையும் நாவுகளையும் படைக்காமல் இருந்துவிட்டானே.
யாண்
- அழகு; யாண் + அன் - யாணன்; இது ஈறு குறைந்து
விளியாயிற்று. நின்னை எய்துதற்கு என உரிமை பாராட்டிக் கூறியது
மகளிர் சொல்வன்மையைக் காட்டுகிறது. 'காணற்கு, தொழற்கு, வாழ்த்த :
முறையே கண், கை, நா படைத்திலானே' என்பது முறை நிரல்நிறை
அணி எனப்படும்.
(19)
638. |
வையம்நின்
நகரி செம்பொன் வடகிரி நினது பீடம்
வெய்யவன் நினது தீபம் வேலைமஞ் சனநீர்ச் சாலை
செய்யவள் நினது பாரி திங்கள்நின் கவிகை செவ்வேல்
ஐயநின் பெருமை எம்மால் அளவிடற் கரிதே என்றார். |
(இ - ள்.)
வையம் நின் நகரி - இந்த மண்ணுலகம் உன்
நகரமாகும், செம்பொன் வடகிரி நினது பீடம் - செம்பொன் மலையாகிய
மேருமலை உன் அரியணையாகும், வெய்யவன் நினது தீபம் - கதிரவன்
உனது விளக்காவான், வேலை மஞ்சன நீர்ச்சாலை - கடல் நீ குளிக்கும்
நீர் நிரைந்துள்ள இடமாகும், செய்யவள் நினது பாரி - திருமகள் உன்
மனைவியாவாள், திங்கள் நின் கவிகை - மதியமே உன்
வெண்குடையாகும், செவ்வேல் ஐய நின் பெருமை எம்மால் அளவிடற்கு
அரிதே என்றார் - செம்மையான வேலைக் கையில் கொண்ட மன்னனே
! உன்னுடைய பெருமை எங்களால் அளவிட்டுக் கூற முடியாதது என்று
புகழ்ந்தனர் (மகளிர் இருவரும்).
உயர்வு நவிற்சியாக மகளிர் மன்னனுடைய பெருமைகளைக்
கூறினர். திருவுடை மன்னரைத் திருமால் எனக் கூறுதல் வழக்கு
ஆதலின் திருமகளை மன்னன் மனைவியாகக் கூறினர்.
(20)
639. |
சொல்லிய
மாற்றம் கேளாத் தோன்றலும் வியந்து நோக்கி
வல்லிநீர் யாரே தூர்தான் வந்தவா றேதீண் டென்றான்
அல்லியம் தொடையன் மார்ப இவ்வனத் தகத்து வாழ்வோம்
புல்லிய சாதி ஈனப் புலைச்சியர் யாங்கள் ஐயா. |
|