பக்கம் எண் :


33

அந்த உழத்தியர்கள், எவ்வணம் களை கொய்குவர் - எவ்விதமாகத்
தம்முறுப்போடொத்த அம்மலர்களைக் களையாகப் பிடுங்கி எறிவர்?
களை களையாது நின்றனர்.

     சீறடி - சிறுமை + அடி : பண்புத்தொகை. கொய் : பகுதி. கு :
சாரியை; வ் : எதிர்கால இடைநிலை : அர் : பலர்பால் விகுதி.

     "பண்கள்வாய் மிழற்று மின்சொற் கடைசியர் பரந்து நீண்ட
     கண்கைகான் முகம்வா யொக்குங் களையலாற் களையி லாமை
     உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகலா துலாவி நிற்பார்
     பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்"

என்ற கம்பராமாயணக் கவி (நாட்டுப். 10) இங்கு ஒப்புநோக்கற் பாலது.
இதில், ஆடவர் களை களைய வந்துநின்றனர் என்பது இதுவே வேறுபாடு.
                                                   (42)

 
  உழத்தியர் கயற்கண் கண்டு உழவர் உளம் மயங்கல்    
57. வயலின் மென்களை மாய்க்குங் கடைசியர்
சயநெ டுங்கண் சலிலத்தில் தோன்றலால்
மயல்வி ளைந்தும யங்கிடு மள்ளர்தாம்
கயல்க ளென்றய லிற்பறி கட்டினார்.

     (இ - ள்.) வயலின் மென் களை மாய்க்குங் கடைசியர் சய நெடுங்
கண் சலிலத்தில் தோன்றலால் - அந்த வயல்களிலுள்ள மெல்லிய
களைகளைப் பிடுங்குகின்ற உழத்தியர்களின் வெற்றிபொருந்திய நீண்ட
கண்களின் நிழல் வயலிலுள்ள நீரில் தோன்றுவதால், மயல் விளைந்து
மயங்கிடும் மள்ளர்தாம் - வேட்கை தோன்றி மயங்கிய உழவர்கள்,
கயல்கள் என்று அயலில் பறி கட்டினார் - இந்நிழல்களை மீன்கள் என
நினைத்து அவைகளைப் பிடிப்பதற்குப் பறி கட்டினார்கள்.

     பறி - மீன் பிடிக்குங் கருவி; கண்ணிழலைக் கயல் என்று மயங்கி
னமையின் மயக்க அணி. தாம் : பகுதிப்பொருள் விகுதி. கடைசியர்
கண்களையே நோக்கிக் காமமயக்கங்கொண்டு திரியும் மள்ளர் ஆதலால்
அவர்கள் கண்ணின் நிழலையும் கயலென மயங்கினர் என்பது தோன்ற
'மயல் விளைந்து மயங்கிடு மள்ளர்' என்றார்.
                                                   (43)

 
  செஞ்சாலி கருவுற்றுக் கதிர் ஈனல்
58. சேலி ரும்புனற் கேள்வனைச் சேர்ந்துபின்
சூலி ருந்து துவண்டலைந் தீன்றுமெய்ப்
பாலி ருந்து பசந்து பழுத்தசெஞ்
சாலி கற்பினர் போற்றலை சாய்த்தவே.

     (இ - ள்.) சேல் இரும்புனல் கேள்வனைச் சேர்ந்து - மீன்களுடன்
கூடிய மிகுந்த தண்ணீராகிய கணவனைக் கூடி, பின் சூல் இருந்து
துவண்டு அலைந்து ஈன்று - பிறகு கருவுற்றுத் துவண்டு அசைந்து
கதிராகிய மகவைப் பெற்று, மெய்ப்பால் இருந்து - தன்னுடம்பில் பால்
கொண்டிருந்து, பசந்து -