பக்கம் எண் :


359

     (இ - ள்.) இரதம் மேல் முனி ஏறியது அகிதமோ இதமோ -
தேரின்மேல் முனிவன் ஏறிக்கொண்டது நாட்டுக்கு நன்மையோ தீமையோ,
சரதமோ எனும் ஐயத்தார் வந்து அவண் சார்ந்தார் - உண்மையோ
என்னும் ஐயம் உடையவர்களாய் நகரமக்கள் அவ்விடத்தை வந்து
அடைந்தனர், இவ்வகை விரதம் விளைத்தவாறு ஏது என மெலிந்து -
இத்தகைய விரதத்தை மன்னன் மேற்கொண்டது ஏன் என நினைத்து
இளைத்து, கரதலங்களால் முகத்து அறைந்து கதறி அழுதனர் -
கைகளால் முகத்தில் அறைந்துகொண்டு கதறிக்கதறி அழுதனர்.

     முனிவன் தேர்மேலேறி வருவது நமது நன்மைக்கோ தீமைக்கோ
என்றும் ஐயுற்றனர் அன்றியும் அரசனாக முனிவன் வருகின்றான் என்று
கூறுகின்றனரே சிலர், இது உண்மையா என்றும் ஐயுற்றனர். இவ்வாறு
மன்னன் விரதங்கொண்டு நாடளித்தது என்ன காரணம் என்று மனம்
வாடிக் கைகளினால் முகத்திலறைந்து அழுதனர் பலர்.
                                                   (113)

732. ஏங்கு வாரிளங் கொடியையும் சேயையும் ஏந்தித்
தாங்கு வார்செழுந் தாளிலே வீழ்ந்துவீழ்ந் தயர்வார்
ஓங்கி ஓங்கியே அறைந்தறைந் தொளிமுகம் கன்றி
வீங்கு வார்அழு வார்விழு வார்உளம் மெலிவார்.

     (இ - ள்.) ஏங்குவார் - நகரமக்கள் அழுது ஏங்குவார்கள், இளங்
கொடியையும் சேயையும் ஏந்தித் தாங்குவார் - இளங்கொடிபோன்ற
சந்திரமதியையும் அவன் பிள்ளையாகிய தேவதாசனையும் கைகளால்
ஏந்தித் தாங்குவார்கள், செழுந் தாளிலே வீழ்ந்து வீழ்ந்து அயர்வார் -
செழுமையான கால்களிலே விழுந்து விழுந்து வணங்கி அயர்ச்சி கொண்டு
வருந்துவார்கள், ஓங்கி ஓங்கியே அறைந்து அறைந்து ஒளிமுகம் கன்றி
வீங்குவார் - ஓங்கி ஓங்கி முகத்தில் அறைந்துகொண்டு முகத்தின் ஒளி
குறைந்து வீங்கும்படி செய்வார்கள், அழுவார் விழுவார் உளம் மெலிவார்
- அழுவார்கள் விழுவார்கள் மனம் மெலிந்து வாடுவார்கள்.
                                                   (114)

 
733. மன்ன வர்க்கும்நம் அன்னைக்கும் மைந்தற்கும் அந்தோ
என்ன பாவம்வந் தெய்திய வென்றிருந் தேங்கப்
பொன்ன கர்ப்பெரும் புரிசையின் புறத்துவந் தணுகி
இன்னல் செய்தவக் கௌசிகன் இரதம்விட் டிழிந்தான்.

     (இ - ள்.) மன்னவற்கும் நம் அன்னைக்கும் மைந்தற்கும் -
மன்னவ னாகிய அரிச்சந்திரனுக்கும் நம் அன்னையாகிய சந்திரமதிக்கும்
மைந்தனாகிய தேவதாசனுக்கும், அந்தோ என்ன பாவம் வந்து எய்திய
என்று இருந்து ஏங்க - ஐயோ என்ன பாவங்கள் வந்து சேர்ந்தன என்று
இருந்து வருந்த, பொன் நகர்ப் பெரும் புரிசையின் புறத்து வந்து அணுகி
- அழகிய நகரத்தின் மதிற்புறத்தை வந்து நெருங்கி, இன்னல் செய்த
அக்கௌசிகன் இரதம் விட்டு இழிந்தான் - மன்னனுக்கு இவ்வளவு
துன்பங்களையும் செய்த முனிவன் தேரினின்று இறங்கினான்.