பக்கம் எண் :


360

     புறநகர் வந்து தங்கின விசுவாமித்திரன், அரிச்சந்திரனும் அவன்
மனைவி மகனுடன் வந்து நின்றான். இவர்களைக் கண்டு மக்கள்
எல்லாரும் வருந்தினர்; என்ன பாவம்! இவர்கள் அரசினையிழந்து
விட்டனரே என்று பெருமூச்சுவிட்டனர் என்க.
                                                    (115)

 
734.

கோசி கன்தனை யுடன்கொடு கோநகர் புகுந்து
வாசி உள்ளவும் மதகரி உள்ளவும் வழங்கிக்
காசி னல்லறை பூசனை அறைஎலாங் காட்டித்
தூசி னல்லறை துயிலறை பாரெனச் சொன்னான்.

     (இ - ள்.) கோசிகன்தனை உடன் கொடு கோ நகர் புகுந்து -
கௌசிகமுனிவனை உடன் அழைத்துக்கொண்டு தலைநகரமாகிய
அயோத்திமாநகரினுள் புகுந்து, வாசி உள்ளவும் மதகரி உள்ளவும் வழங்கி
- குதிரைகளும் அங்கு உள்ளவற்றைக் கொடுத்து, காசின் நல்லறை
பூசனை அறை எலாம் காட்டி - பொருள் வைத்துள்ள அறையையும்
பூசைசெய்யும் அறை முதலியவற்றையும் காட்டி, தூசின் நல் அறை துயில்
அறை பார் எனச்சொன்னான் - ஆடைகள் வைக்கும் அறை இவை
தூங்கும் அறை இவை பார்த்தருள் என்று கூறினான்.

     மன்னவன் முனிவனைக் கூட்டிக்கொண்டுவந்து யானை குதிரை
எல்லாவற்றையும் கொடுத்து, காசறை, பூசையறை, தூசறை, துயிலறை
இவற்றைக் காட்டினான் என்க. காசு - பொன் மணி முதலியவற்றைக்
குறிக்கும். தூசு - பட்டாடை முதலிய ஆடை வகைகளை யுணர்த்தும்.
                                                    (116)

 
735. என்னின் முன்னவர் இருபதோ டொருவருண் டந்த
மன்னர் வைத்தசெம் பொன்னறை யீதென வழங்கி
அன்ன சத்திரம் இவைஇவை அடியனேன் வைத்த
பொன்ன றைத்தொகை கொள்கெனக் கொடுத்தனன் புகழோன்.

     (இ - ள்.) என்னின் முன்னவர் இருபதோடு ஒருவர் உண்டு -
எனக்குமுன் என் குலத்தில் பிறந்த முன்னோர் இருபத்தொருவர் உளர்,
அந்த மன்னர் வைத்த செம்பொன் அறை ஈது என வழங்கி - அந்த
மன்னர்கள் வைத்துப் பாதுகாத்த செம்பொன் அறை இதுவாகும் என்று
சொல்லிக்கொடுத்து, அன்ன சத்திரம் இவை இவை - இவையெல்லாம்
அன்னச்சத்திரங்களாகும், அடியனேன் வைத்த பொன் அறைத் தொகை
கொள்க எனப் புகழோன் கொடுத்தனன் - அடியேன் தேடிவைத்த பொன்
நிறைந்த அறைகள் இவை ஏற்றுக்கொள்ளுக என்று புகழ்மிக்க மன்னன்
கொடுத்தான்.

     முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அழிக்காமல் மன்னன்
சேர்த்து வைத்திருந்தான். தான் தேடிய செல்வத்தை வேறு பல
அறைகளில் வைத்திருந்தான். அவற்றைத் தனித்தனியே காட்டி
வழங்கினான் என்க.
                                                    (117)