பக்கம் எண் :


361

736. ஆட ரங்குகள் அம்பலம் மடம்அன்ன சாலை
மாட மாளிகை மண்டபம் மஞ்சனச் சாலை
கூட கோபுரம் மடைப்பள்ளி கோயில்செய் குன்றம்
பீடம் ஆதனம் இவைஎனக் கொடுத்தனன் பின்னை.

     (இ - ள்.) ஆடு அரங்குகள் - பெண்கள் நடனம் ஆடும்
சாலைகள், அம்பலம் - பொதுமக்கள் மன்றம், மடம் அன்னசாலை
மாடம் மாளிகை - மடங்களும் அன்னம் அளிக்கும் அறச்சாலைகளும்
மாடங்களும் மாளிகைகளும், மண்டபம் மஞ்சனச்சாலை - மண்டபங்களும்
குளிக்குமிடங்களும், கூடகோபுரம் மடைப்பள்ளி கோயில் செய் குன்றம் -
கூட கோபுரங்களும் மடைப்பள்ளிகளும் கோயில்களும் செய் குன்றுகளும்,
பீடம் ஆதனம் இவை என பின்னை கொடுத்தனன் - மேடைகளும்
இருக்கும் ஆசனங்களும் இவை இவை என்று கூறி மன்னன் பிறகு
கொடுத்தான்.

     மன்னவன் நடனசாலை மன்ற முதலிய எல்லாவற்றையும் ஒவ்
வொன்றாய்க்காட்டி அவற்றை அம் முனிவர்க்குக் கொடுத்தனன்.
                                                    (118)

 
737. இந்த ஆதனத் திருந்தருள் எனமுனி இருந்தான்
அந்த எல்லையில் அரசனும் அவனடி பணிந்தான்
வந்த மன்னரும் அமைச்சரும் மங்கையர் குழாமும்
சுந்த ரக்கழற் சேனையும் அவனடி தொழுதார்.

       (இ - ள்.) இந்த ஆதனத்து இருந்தருள் என முனி இருந்தான்
- இந்த ஆசனத்தில் இருந்து அருள்வாய் என மன்னன் கூற முனிவன்
இருந்தான், அந்த எல்லையில் அரசனும் அவனடி பணிந்தான் - அந்த
நேரத்தில் அரசனும் அம் முனிவன் அடிகளை வணங்கினான், வந்த
மன்னரும் அமைச்சரும் மங்கையர் குழாமும் - அங்கு வந்த மன்னர்களும்
அமைச்சர்களும் பெண்கள் கூட்டமும், சுந்தரக் கழற் சேனையும் அவன்
அடி தொழுதார் - அழகிய வீரக்கழல் அணிந்த சேனைகளும் அம்
முனிவனுடைய திருவடிகளே வணங்கினார்.

     எல்லாவற்றையும் கொடுத்தபின் தன்னரசிருக்கை மண்டபம் வந்து
தான் அமர்ந்திருக்கும் அரியணையைக் காட்டி யமர்வித்தான். அரசனும்
பணிந்தான், மற்றவரும் அம்முனிவனை யரசனாக நினைத்துப் பணிந்தனர்
என்பது.
                                                    (119)

 
738. தொழு தெழுந்துதம் சுடர்முடி மன்னனை நோக்கி
அழுது நின்றவத் தலைவரை அவன்கையா லமைத்துப்
பழுதி லாதுநீர் எமக்குமுன் செய்தஅப் பரிசே
முழுதும் இந்தமா முனிவற்கு முறைசெயும் என்றான்.

     (இ - ள்.) தொழுது எழுந்து தம் சுடர் முடி மன்னனை நோக்கி
- வணங்கி எழுந்து தம்முடைய ஒளி மணி பதித்த முடியணிந்த
மன்னனைப் பார்த்து, அழுது நின்ற அத்தலைவரை அவன் கையால்
அமைத்து - அழுதுகொண்டு நின்ற அச் சேனைத்தலைவர் முதலியோரை
மன்னன்