கைகாட்டி அமைதிகொள்ளும்படி
செய்து, பழுது இலாது நீர் எமக்கு
முன் செய்த அப் பரிசே - குற்றம் சிறிதும் இல்லாமல் நீங்கள் எமக்கு
முன்பு செய்த அவ்விதமே, முழுதும் இந்த மா முனிவற்கும் முறை செயும்
என்றான் - இந்தச் சிறந்த முனிவனுக்கும் முழுதும் நன்முறையிற்
செய்யுங்கள் என்று கூறினான் (அரிச்சந்திரன்).
முனிவனை
வணங்கியபின் அரிச்சந்திரன் எழுந்து நின்றான். அம்
மன்னனைக் கண்டு குடிகளெல்லாரும் மந்திரிகளும் அழுதனர். அழுது
புலம்பியவர்களையெல்லாம் கையமைத்து 'நீங்கள் அனைவரும் இம்
முனிவர்க்குப் பணிசெய்யுங்கள்; என்னைப்போல அரசனாகக் கருதுங்கள்'
என்றான்.
(120)
739. |
எவர்க்கு
நல்லவர் திரிபுரம் எரிஎழச் சிரித்த
சிவற்கு நல்லவர் செங்கண்மா லுக்கும்நான் முகத்தின்
அவற்கு நல்லவர் அமரர்க்கும் நல்லவர் ஆவர்
இவற்கு நல்லவர் எனக்கு நல்லவர்என இசைத்தான். |
(இ - ள்.) எவர்க்கும் நல்லவர்
- இம் முனிவர் எல்லோர்க்கும்
நல்லவர், திரிபுரம் எரி எழச் சிரித்த சிவற்கு நல்லவர் -
முப்புரங்களையும் எரியுண்ணுமாறு சிரித்த சிவபெருமானுக்கும் நல்லவர்,
செங்கண்மாலுக்கும் நான்முகத்தன் அவற்கும் நல்லவர் - சிவந்த
கண்களையுடைய திருமாலுக்கும் நான்கு முகங்களையுடைய அயனுக்கும்
நல்லவர், அமரர்க்கும் நல்லவர் ஆவர் - தேவர்களுக்கும் நல்லவர்
ஆவார், இவர்க்கு நல்லவர் எனக்கு நல்லவர் என இசைத்தான் - இம்
முனிவருக்கு நல்லவராய் இருப்பவர் எனக்கு நல்லவர் ஆவர் எனக்
கூறினான்.
அரிச்சந்திரன் அனைவரையும் நோக்கி 'இம் முனிவர்
எவர்க்கும்
நல்லவர் ஆதலால் இவர்க்கு நல்லவராகப் பணிபுரியும் பொதுமக்கள்
எல்லாரும் இனி எனக்கு நல்லவராவர்' என்று கூறினான்.
(121)
740. |
வையம்
ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்கச்
செய்ய வாய்மலர் செங்கையாற் புதைத்தடி வணங்கி
ஐய நின்மொழி மறுப்பவ ராரெனா முகத்திற்
கைய றைந்தழக் கண்டஅக் கௌசிகன் கருதும். |
(இ
- ள்.) வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்க - ஏழ
உலகங்களையும் தன் புகழால் ஆளும் மன்னன் அவ்வாறு கூறியவுடன்,
செய்ய வாய் மலர் செங்கையால் புதைத்து அடி வணங்கி - சிவந்த
மலர்போன்ற வாயினைச் சிவந்த கையால் மூடி அவன் திருவடிகளில்
வணங்கி ஐய நின் மொழி மறுப்பவர் ஆர் எனா - ஐயனே! உன்னுடைய
மொழியை மறுப்பவர் யார் இருக்கின்றார் என்று கூறி, முகத்தில் கை
யறைந்து அழக் கண்ட - முகத்தில் கையினால் அறைந்துகொண்ட
அழுகின்ற செயலைக் கண்ட, அக் கௌசிகன் கருதும் - அக் கௌசிக
முனிவன் நினைக்கத் தொடங்கினான்.
|