பக்கம் எண் :


363

     வையம் ஏழு என்பது மண்ணுலகத்துப் பல நாடுகள். வாய் மலர் :
உருவகம். வாயினைக் கையால் மூடிப் பேசுதல் - மரியாதைச் செயல்.
முகத்தில் கையறைதல் - பெருந்துன்ப நிலையை யுணர்த்தும்.
அழுதவர்களைக் கண்ட கோசிகன் மனத்திற் பலவாறு கருதினன் என்பது.
                                                   (122)

 
741. அறம் திரண்டுரு வாகிய அரசனை யவமே
புறம் பறைந்தனம் புன்மையேம் புத்திஇல் லாமற்
றிறம் தெரிந்தவர் செயலிதோ எனக்கவு சிகன்மெய்
மறந் திருந்துபின் மற்றுமோர் வாசகம் உரைப்பான்.

       (இ - ள்.) அறம் திரண்டு உருவாகிய அரசனை - அறமே
திரண்டு வடிவம் எடுத்தது போன்ற இந்த அரசனை, புன்மையேம் புத்தி
இல்லாமல் அவமே புறம் பறைந்தனம் - அற்பத்தன்மையுடைய யாம்
புத்தி இல்லாமல் வீணே இந்திரனுடைய மன்றத்தில் புறங்கூறிப்
பழித்தோம், திறம் தெரிந்தவர் செய்ல இதோ என - நீதிமுறையறிந்தவர்
செய்யும் செயலாகுமோ இது என்று, கவுசிகன் மெய் மறந்திருந்து பின்
மற்றுமோர் வாசகம் உரைப்பான் - கௌசிகமுனிவன் தன்னை மறந்திருந்து
பிறகு மற்றுமொரு மொழி பேசத் தொடங்கினான்.

     மன்னனுடைய உண்மைநிலையை உணர்ந்த முனிவன் 'அறம்
திரண்டு உருவாகிய அரசன்' என்றான். நீதிமுறையறிந்தவர் புறங்கூறார்.
"புறங்கூறிப் பொய்த்துயிர்" என்னும் திருக்குறள் ஒப்பு நோக்கத்தக்கது.
முனிவன் நெஞ்சம் சுட்டது.

     "தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
     தன்னெஞ்சே தன்னைச் சுடும்"

என்பது பொய்யாமொழியன்றோ?
                                                   (123)

 
742. இந்த வையமும் இருநிதிக் குழுவும்இப் பொருளும்
முந்து நீதர மொழிந்தஅப் பொருளும்யான் இழப்பேன்
எந்த மக்களை மணம்புணர்ந் திந்நக ரிருவென்
றந்தணன் மகிழ்ந் தரசனைக் கைபிடித் தமைத்தான்.

     (இ - ள்.) இந்த வையமும் இரு நிதிக் குழுவும் இப் பொருளும்
- இந்த உலகத்தையும் செல்வக் குவியலும் மற்றும் இங்குள்ள
பொருள்களும், முந்து நீ தர மொழிந்த அப் பொருளும் யான் இழப்பேன்
- முன்பு நீ தருவதாகச் சொன்ன பொருளையும் யான் உனக்கே
கொடுக்கின்றேன், எந்தம் மக்களை மணம் புணர்ந்து இந்நகர் இரு என்று
- எம்முடைய மக்களை மணஞ்செய்துகொண்டு இந்நகரத்தில் நீ இரு
என்று, அந்தணன் மகிழ்ந்து அரசனைக் கைபிடித்து அமைத்தான் -
அந்தணனாகிய முனிவன் மகிழ்ந்து அரசனைக் கையாற் பிடித்து அமைதி
கூறினான்.