பக்கம் எண் :


364

     'நீ தந்த எல்லாப்பொருள்களையும் நீயே வைத்துக்கொண்டு எம்
மக்கள் இருவரையும் மணந்து அரசனாக வாழ்வாய்' என்று கையைப்
பிடித்து ஆசனத்தில் அமர்த்தினான் என்பது.
                                                   (124)

 
743. கைபி டித்தலும் முனிவனைக் கால்பிடித் திறைவன்
மெய்பி டித்தலும் மிக்கவை செய்தலும் அல்லால்
மைபி டித்தகட் பரத்தையர்ப் புணர்தலும் வழங்காப்
பொய்பி டித்தலும் அறனல செய்தலும் புகழோ.

       (இ - ள்.) கை பிடித்தலும் இறைவன் முனிவனைக் கால்
பிடித்து - அரசனுடைய கையை முனிவன் பிடித்தவுடன் மன்னன் அம்
முனிவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டு, மெய் பிடித்தலும்
மிக்கவை செய்தலும் அல்லால் - உண்மையைப் பிடித்து நடத்தலும் புகழ்
மிகத் தரும் செயல்களைச் செய்வதும் அல்லாமல், மை பிடித்த கண்
பரத்தையர்ப் புணர்தலும் - மை தீட்டிய கண்களையுடைய பரத்தைப்
பெண்களை மணத்தலும், வழங்காப் பொய் பிடித்தலும் அறனல செய்தலும்
புகழோ - எப்பொழுதும் நிலைத்து நில்லாத பொய்யைத் துணையாகப்
பிடித்தலும் அறநெறிக்கு மாறுபட்டவற்றைச் செய்தலும் புகழ் ஆகுமோ?

     முனிவன் கைபிடித்தவுடன் அரசன் முனிவன் கால்களைப் பிடித்து
வேண்டினான். 'நான் புலைப்பெண்களைப் புணரேன்; பொய்
கூறமாட்டேன்; நெறியல்லன செய்யேன்; ஆதலால் அரசு வேண்டேன்'
என்றான்.
                                                   (125)

 
744. உமக்கி யான்சொலல் வேண்டுமோ மனுவின்பி னுதித்தே
எமக்கு முன்னர சாண்டபார் வேந்தர்மூ வெழுவர்
தமக்கு முன்னொருத் தருக்கும்தாங் கரும்பெரும் பாரம்
சுமக்க வல்லனோ தவிர்கவிச் சொல்லெனாத் தொழுதான்.

     (இ - ள்.) உமக்கு யான் சொலல் வேண்டுமோ - உமக்கு யான்
சொல்லவேண்டுமோ, மனுவின் பின் உதித்தே எமக்கு முன் அரசாண்ட
பார் வேந்தர் மூவெழுவர் - மனு என்னும் மன்னனுக்குப் பின் பிறந்து
எமக்கு முன்னால் அரசாண்ட மன்னர் இருபத்தொருவர், தமக்கு முன்
ஒருத்தருக்கும் தாங்கரும் பெரும் பாரம் - அவர் தம்முள் முன்
ஒருவராலும் சுமக்கமுடியாத பெரிய தீவினையாகிய சுமையை,
சுமக்கவல்லனோ தவிர்க இச் சொல் எனா தொழுதான் - சுமக்க
வல்லமையுடையேன் ஆவேனோ! இம்மொழியை விட்டுவிடுக என்று
சொல்லி வணங்கினான்.

     கதிரவன் மரபில் முதல் மன்னன் 'மனு' என்பவன். அரிச்சந்திரனுக்கு
முன் இருபத்தொரு மன்னர் இருந்து ஆண்டனர். என்முன்னோர்களாற்
சுமக்கமுடியாத பெரும் பாரத்தை நான் சுமப்பேனோ என்றான் 'தாங்கரும்
பெரும் பாரம்' பழி பாவம் பொய் முதலியவற்றை, 'மனு முதலிய என்
முன்னோர் நெறியல்லாதன செய்திலர் ஆதலால் யானும் நீ கூறியபடி
செய்யேன்' என்பது கருத்து.
                                                   (126)