பக்கம் எண் :


36

  கோசல நாட்டின் செல்வ வாழ்க்கை
62. நாடு தோறும்இவ் வாறு நடப்பன
காடு தோறும் களிமயில் ஆடுவ
வீடு தோறும் திருவிளை ஆடுவ
கூடு தோறும் கருங்குயில் கூவவே.

     (இ - ள்.) கூடு தோறும் கருங் குயில் கூவ - பறவைக் கூடுகளில்
எல்லாம் கருநிறக் குயில்கள் இனிமையாகக் கூவ, காடு தோறும் களிமயில்
ஆடுவ - காடுகளிலெல்லாம் களிப்புடைய மயில்கள் ஆடிக்
கொண்டிருக்கும், வீடு தோறும் திருவிளை ஆடுவ - வீடுகளிலெல்லாம்
செல்வங்கள் விளையாடிக்கொண்டிருக்கும், நாடு தோறும் இவ்வாறு
நடப்பன - கோசலநாடு முழுதும் இவ்வாறு மங்கல வாழ்வு நடக்கும்.

     காடுகளில் குயில் கூவ மயில் ஆடும். வீடுகளில் மக்கள் மழலை
மிழற்றத் திருமகள் விளையாடுவாள். மனை தவிர்ந்த மற்றைய இடம் காடு
எனப்படும். உழவர் மனைகளில் நெல் முதலிய உணவுப்பொருள்களும்,
பொன் மணி முதலிய செல்வங்களும் நிறைந்திருத்தலின் 'வீடு தோறும்
திருவிளை யாடுவ' என்றார். திரு என்பது செல்வப்பொருள் பலவற்றையும்
உணர்த்தும் பால்பகா வஃறிணைப்பெயராக ஈண்டுக் கொள்க.
                                                   (48)

 
  அன்னங்கள் முத்துக்களை அடைகாத்தல்
63. பெடைகி டப்பவும் பிள்ளை கிடப்பவும்
இடைகி டப்ப இளஅனச் சேவல்கள்
மடைகி டக்கும் வளைமுத்தை அண்டமென்
றடைகி டப்பன அன்னப் பெடைகளே.

     (இ - ள்.) பெடைகிடப்பவும் - மற்றைய அன்னப்பேடுகள் ஒரு
புறம் கிடப்பவும், பிள்ளை கிடப்பவும் - தங்களுடைய குஞ்சுகள் ஒரு
புறம் இருக்கவும், இள அனச் சேவல்கள் இடை கிடப்ப - இளமையான
ஆண் அன்னங்கள் அவற்றின் நடுவே படுத்துக் கிடக்கும்; அன்னப்
பெடைகள் - சில பெட்டை அன்னங்கள், மடை கிடக்கும், வளை முத்தை
அண்டம் என்று அடை கிடப்பன - நீர் பாய்கின்ற மடைகளில் கிடக்கும்
சங்கீன்ற முத்துக்களைத் தங்கள் முட்டை யென்று மயங்கி
அடைகாத்துக்கிடக்கும்.

     பிள்ளை எனும் பெயர் புள்ளினுக்கும் மரபாகும். "பார்ப்பும்
பிள்ளையும் பறப்பவற்றிளமை" முத்துக்களை முட்டையென அன்னங்கள்
மயங்கி அடைகாத்தனவாகக் கூறினமையின் மயக்க அணி. இல்வாழ்க்கை
நடத்தும் ஆடவர்கள் தம் மனைவியொருபுறமும், மக்கள் ஒருபுறமும்
படுத்துறங்க நடுவிற் படுத்துறங்குவது இயற்கை. அது போல
அன்னச்சேவலும் நடுவில் கிடந்தது என்றார்.
                                                   (49)