பக்கம் எண் :


37

64. சாயெ லாம்பரு வச்செழுஞ் சாலியின்
காயெ லாம்தின்று கன்னற் படப்பையுள்
மேய லால்இள மேதிக ளின்கடை
வாயெ லாம்முத்து மாலைகள் நர்லுமே.

     (இ - ள்.) சாய் எல் ஆம் பருவச் செழுஞ் சாலியின் காய் எலாம்
தின்று - சாய்ந்த ஒளிபொருந்திய பருவம் நிறைந்த செழிப்பான நெற்
கதிர்களையெல்லாம் தின்று, கன்னல் படப்பையுள் மேயலால் கரும்புத்
தோட்டங்களிலும் சென்று மேய்தலால், இள மேதிகளின் கடை வாய்
எலாம் முத்து மாலைகள் நாலும் - இளமையான எருமைகளின் கடை
வாயில் எல்லாம் முத்துக்கோவைகள் தொங்கும்.

     சாய் என்பது வினைத்தொகையாய்ச் சாலி என்னும் பெயர்
கொண்டது. காயெலாம் : ஒருமைபன்மை மயக்கம். கடைவாய் :
முன்பின்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை. இலக்கணப் போலி;
வாயின் கடை என்று கொள்க, ஏகாரம் : ஈற்றசை; இள மேதி :
பண்புத்தொகை. முத்து மாலை - நெல்லிலும் கரும்பிலும் முத்துப் பிறக்கும்
என்ற கருத்துடன் கூறினரெனக்கொள்க. முத்துப் பிறக்கும் இடங்கள் 20.
மதி, மேகம், சங்கு, சிப்பி, மீன், நந்து, முதலை, உடும்பு, தாமரை, வாழை,
கமுகு, கரும்பு, செந்நெல், மூங்கில், யானைக்கொம்பு, பன்னிக்கொம்பு,
பசுவின் பல், நாகம், கொக்கு, நங்கையர் கழுத்து. எருமைகள் செழிப்பான
நெல்லும் கரும்பும் தின்று அசை போடுவதால் கடைவாய்களில் நெற்சாறும்
கரும்பின் சாறும் வடிவது முத்துமாலை தொங்குவது போலத் தோன்றும்
என்று கொள்வதே சிறந்தது.
                                                   (50)

 
  அன்னப்பிள்ளையை அலைகள் துயிற்றல்
65. மட்டி லாமட வார்குடை வாவிவிட்
டெட்டி அன்னம் இரிந்து பறக்கவாய்
விட்டி ரங்கிடு பார்ப்பினை மென்மலர்த்
தொட்டில் ஆட்டித் திரைகள் துயிற்றுமால்.

     (இ - ள்.) அன்னம் மட்டு இலா மடவார் குடை வாவி விட்டு
எட்டி இரிந்து பறக்க - அன்னப்பறவைகள், கணக்கற்ற பெண்கள்
நீராடுகின்ற குளங்களை விட்டுத் தூரத்தே பறந்தோடிச் செல்ல, திரைகள்
வாய்விட்டு இரங்கிடும் பார்ப்பினை மென்மலர்த் தொட்டில் ஆட்டித்
துயிற்றும் - நீர் அலைகள் வாய்விட்டு அழுகின்ற அன்னக் குஞ்சுகளை
அவைகள் படுத்திருக்கின்ற மென்மையான தாமரைமலர்த் தொட்டிலை
மெல்லென அசைத்துத் தாலாட்டித் தூங்கவைக்கும்.

     இலா : ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; குடை வாவி;
வினைத்தொகை. பெண்கள் நீராடும்போது உண்டாகின்ற அலைகள்
தாமரைமலரிலுள்ள அன்னக்குஞ்சுகளைத் தாலாட்டி உறங்கவைக்
கின்றதிலிருந்து அலைகளின் மென்மையும் நீராடும் மென்மையும்
தோன்றுகின்றன. மடவார் நீராட வாவியில் இறங்கியவுடனே அன்னங்கள்
தம் குஞ்சுகளையும் மறந்து இரிந்து என்பதும், குஞ்சுகள் தாயின்றிக்
கத்தும்