பக்கம் எண் :


366

செய்யி னும்பொறுத் தருள்செய்வாய் செல்கதி அளித்த
ஐய னேஉன தடைக்கலம் இவரெனா அளித்தான்.

     (இ - ள்.) அமைச்சரைக் கையினாற் பிடித்துக் காட்டி - அமைச்
சர்களைக் கையினாற் பிடித்து முனிவரிடம் காட்டி, இவர்கள் வையினும்
நினை மறுக்கினும் மற்றும் ஓர் குற்றம் செய்யினும் - இவர்கள் உன்னை
வைதாலும் மறுத்துப் பேசினாலும் வேறு குற்றம் செய்தாலும், பொறுத்து
அருள் செய்வாய் - நீ பொறுத்து அருள் செய்வாயாக, செல் கதி அளித்த
ஐயனே - செல்வதற்கு நல்ல கதியைக் கொடுத்த ஐயனே, இவர் உனது
அடைக்கலம் எனா அளித்தான் - இவர்கள் உன்னுடைய அடைக்கலம்
ஆவார்கள் என்று சொல்லிக் கொடுத்தான்.

     அமைச்சர் சிலவேளை மன்னரை வையவும் மறுத்துப் பேசவும்
கூடுமாதலின் சினம் கொள்ளவேண்டா என முனிவனை மன்னன்
வேண்டினான். செல் கதி அளித்த ஐயனே என்றது எனக்கு நீ
நற்கதியைளித்தாய்; என் செல்வங்களையெல்லாம் பெற்றுக்கொண்டாய்;
ஆதலால் நான் நற்கதி செல்வதற்கு வழி இஃது என்ற கருத்தை யுட்
கொண்டது.
                                                   (129)

 
748. குடை நிழற்பொலி கௌசிகன் அடியின்மேற் கொடிநேர்
இடையி னாளையும் மகனையும் இறைஞ்சுவித் தேத்திப்
படையை நோக்கிநீர் நின்மினென் றங்கையாற் பணித்து
விடைஇ தேஎனாப் பணிந்தனன் வேந்தர்க்கு வேந்தன்.

       (இ - ள்.) குடை நிழல் பொலி கௌசிகன் அடியின்மேல் -
வெண் கொற்றக்குடை நிழலில் விளங்கிய கௌசிகமுனிவனுடைய திருவடி
களின்மேல், கொடி நேர் இடையினாளையும் மகனையும் இறைஞ்சுவித்து
ஏத்தி - கொடிபோன்ற இடையினையுடைய மனைவியையும் தன்
மகனையும் வணங்கும்படி செய்து வாழ்த்தி, படையை நோக்கி நீர்
நின்மின் என்று அங் கையால் பணித்து - தன்னைச் சூழநின்ற
படைவீரர்களை நோக்கி நீங்கள் நில்லுங்கள் என்று கையமைத்துக்
காட்டிக் கட்டளையிட்டு, வேந்தர்க்கு வேந்தன் மன்னர்க்கும் மன்னனாகிய
அரிச்சந்திரன், விடை இதே எனாப் பணிந்தனன் - இதுவே நான்
பெற்றுக்கொள்ளும் விடை என்று சொல்லி வணங்கினான்.

     வேந்தர்க்கு வேந்தன் என்றது சக்கரவர்த்தி என்ற பொருளைக்
குறித்தது. ஒருவர்க்கும் வணங்காத மன்னன் இம் முனியை வணங்கினான்.
இது விதியின் கொடுமை என்பதை விளக்கியது.
                                                   (130)

 
749. பரமு னக்குள தென்றிறை அகன்றனன் பரிந்து
புரமெ ரித்தவன் அனையமா முனிபுவி புரந்தான்
சிரம நீங்குவீ ரர்கள்செறி மன்றமும் தெருவும்
பிரம சாரிகண் மலிந்தனர் பெருகுமுட் களிப்பால்.

     (இ - ள்.) இறை பரம் உனக்கு உளது என்று பரிந்து அகன்றனன்
- அரசன் இனிமேல் பூமியைக் காக்கும் பாரம் உம்மைச் சேர்ந்தது என்று